தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம்

🕔 April 7, 2020

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்கிறது என்று தனக்கு தோன்றுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் பொருட்களை விநியோகிக்கும் போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி, விமல் வீரவன்ச மேற்படி கருத்தைக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இவ்விதமாக செயற்படுமாயின் முதலில் அவர்களுக்கு மருந்தை கொடுக்க வேண்டும் என வீரவங்ச கோபத்துடன் கூறியுள்ளார்.

“தேர்தல் ஆணைக்குழு இந்த பிரச்சினைக்குள் அரசியல் செய்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் திடீரென நித்திரையில் இருந்து எழுந்தவர் போல், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். நாங்கள் இதில் அரசியல் செய்யவில்லை.

ஆளும் கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இருக்கலாம், எந்த பேதங்களும் இன்றி இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்திற்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.

அதிகாரிகளால் மாத்திரம் தனியாக இந்த சுமையை சுமக்க முடியாது. இதனை அரசியலாக கருதினால், தேர்தல் ஆணைக்குழுவுக்கு முதலில் மருந்தை கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு பொருட்களை விநியோகிப்பது எனது உரிமை. அதனை நான் தொடர்ந்தும் செய்வேன்” எனவும் விமல் கூறினார்.

ஹோமாகமை வைத்தியசாலைக்கு குளிரூட்டி சாதனத்தை கையளிக்க சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்