ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

🕔 January 16, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பற்றி மக்களிடமிருந்த புகார்கள் என்ன என்பது குறித்து இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவார். மஹிந்த ஏன் தோற்றுப் போனார் என்பதற்கான விடை கோட்டாவுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால், எதையெல்லாம் தனது ஆட்சியில் தவிர்க்க வேண்டும், எவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அவர் செயற்பட்டு வருகின்றார். அவ்வளவுதான்.

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியில் படடோபத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு வெளிநாட்டுப் பயணம் என்றால், கிட்டத்தட்ட ஒரு ‘ஊரை’யே தன்னுடன் மஹிந்த அழைத்துச் சென்றார். அதற்காக தனி விமானத்தைப் பயன்படுத்தியும் வந்தார். இவையெல்லாம் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்குள்ளானது. மக்கள் இவற்றினைக் கண்டு முகம் சுழித்தார்கள்.

இந்தப் பின்னணியில்தான், கடந்த காலத்தில் தனது சகோதரரின் ஆட்சியில் நடந்த தவறுகளையெல்லாம் தவிர்த்து, அதிரடியான நடவடிக்கைகள் மூலம் தனது ஆட்சியின் ஆரம்பத்தினையே அட்டகாசமாக்கிக் கொண்டிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபபய ராஜபக்ஷ.

நாடாளுமன்றுக்கு அக்கிராசனர் உரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்த போது, தனக்கான பாதுகாப்பு அணிவகுப்பைத் தவிர்த்ததோடு, சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் மரியாதையைக் கூட வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

டி.ஏ. ராஜபக்ஷ பரம்பரையினர் அரசியலுக்குள் நுழையும் போது அணியும் குரக்கன் நிறத்து ‘சால்வை’யினை தவிர்த்ததையும் ஜனாதிபதியின் மற்றொரு அதிரடியாகவே பார்க்க முடிகிறது. பார்க்கும் இடமெல்லாம் சால்வைகளும்,  சால்வைகளின் ஆட்சி மீது – ஒரு கட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், மஹிந்தவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும் என்பதை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.

ஆக, எதிரணியினர் ‘கோட்டா’ பற்றி ஏற்படுத்திய அச்சத்துக்கு அப்பாலானதொரு ஆட்சியொன்றினை அவர் தொடங்கியுள்ளமை சந்தோசமானதொரு விடயமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒழுங்கையும், துப்புரவையும் விரும்புகின்ற ஒருவர். அவரின் ராணுவ வாழ்க்கை அவற்றினை அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். அதனால் தூய்மையான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவரால் இலகுவாக முடியும் என்கிற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை களத்துக்கே சென்று நேரடியாகப் பார்த்து, மக்களின் குறைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நடைமுறையை, ஜனாதிபதி தொடர்ந்து வருகிறார். இது மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை மிகக்கடுமையாக ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விமர்சித்த ரஊப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் போன்றோரும் ஜனாதிபதியின் இந்த நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

ஆனால், பல தசாப்தங்களாக தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற சிறுபான்மை மக்களுக்கு ஜனாதிபதியின் இந்த அதிரடிகள் மட்டும் போதுமாக இருக்கப் போவதில்லை.

கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைக் கொண்டு, அவர் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தீர்த்து வைத்தல் அவசியமாகும். சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிட்டத்தட்ட இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமையானது இலங்கை அரசியலில் ஓர் அதிசயமாகும். ஆனால் அதிசயங்கள் எப்போதும் நிகழ்வதில்லை என்பதையும் ஜனாதிபதி புரிந்து கொள்ளதல் வேண்டும். அரசியலில் அதிசயங்கள் நிகழாத போதெல்லாம், சிறுபான்மை மக்களிடம்தான் தமது வெற்றிக்காக சிங்களத் தலைவர்கள் இறங்கி வந்திருக்கின்றனர்.

எனவே, சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்லும் திட்டங்களை ஜனாதிபதி துவங்க வேண்டும். அந்தத் திட்டங்கள் அரசியலுக்கு அப்பாலானதாகவும் நேர்மை மிக்கதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.

அப்படி அவர் செய்வாரானால், சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று ஜனாதிபதியானவர் என்கிற கறையிலிருந்து எதிர்காலத்தில் அவர் விடுபடலாம்.

தனது தேசத்தின் இரண்டு சமூகங்கள், ஜனாதிபதித் தேர்தலில் தன்னைப் புறக்கணித்தமையை கோட்டா போன்ற ஆளுமை மிக்க ஒருவர், சிறியதொரு விடயமாக எடுத்து கொள்ள மாட்டார். எனவே, தமிழ் – முஸ்லிம் சமூகங்களை அரவணைக்க வேண்டி தேவை அவருக்கு உள்ளது.

அதைச் செய்வார் என்று நம்புவோம்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (14 ஜனவரி 2020 )  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்