அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

🕔 November 25, 2019

– அஹமட் –

க்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம்.

அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த போதெல்லாம், அதாஉல்லாவும் அவரின் கூட இருந்தவர்களும் திரும்பத் திரும்ப பிழையாக நடந்து கொண்டு, அவ்வாறு விமர்சிக்கும் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் சேறடிக்கும் நடவடிக்கைகளைத்தான் செய்து வந்தனர்.

இப்போது ‘மின்னல்’ நிகழ்ச்சி விவகாரத்திலும், அதையே செய்கிறார்கள்.

அதாஉல்லா அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று எழுதிய ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் வம்புகிழுக்கும் வேலைகளை, அதாஉல்லாவின் தொண்டர் பெருமக்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். இது அதாஉல்லாவுக்கு ஆரோக்கியமாக அமையாது என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றோம்.

மேலும், மனோ கணேசனை இகழ்வதிலும் வசை பாடுவதிலும் கூட, அதாஉல்லா தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

அதாஉல்லா மீது மனோ கணேசன் – தண்ணீரை வீசியமை கண்டிக்கத்தக்கது. அவர் அதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த நிலைக்கு மனோ கணேசனைக் கொண்டு வந்தவர் அதாஉல்லாதான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

‘தோட்டக்காட்டான்’ என்பது கொச்சை வார்த்தை இல்லை என்றும், அதற்கு தமிழ் – ஆங்கிலத்தில் அகராதி விளக்கங்கள் சொல்லி, விடயத்தை – அதாஉல்லா தரப்பு பூசி மெழுக முயற்சிப்பதும் அயோக்கியத்தனமானது.

“தவறுதலாக அந்த வார்த்தையை நான் உச்சரித்து விட்டேன். அப்படி நான் பேசியிருக்கக் கூடாது, அதற்காக நான் வருந்துகிறேன், எனது மலையக சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்று, அறிக்கையொன்றை அதாஉல்லா விட்டிருந்தால், விடயம் முடிந்து போயிருக்கும். அதைத்தான் நேர்மையான ஊடகவியலாளர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை; அந்த வார்த்தைக்காக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மன்னிப்புக் கேட்க முடியும்.

ஆனால், இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு எம்.ஏ. சுமந்திரன், எஸ். வியாழேந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளெல்லாம், கிடைத்திருக்கும் ‘கெப்’ (gap) இல், ‘கடா’ வெட்டும் அரசியலைச் செய்வது கழிசடைத்தனமாகும்.

‘அரசியல் அரங்கில் மக்கள் பாசையில் பேசுகின்றவர் அதாஉல்லா’ என்கிற பெயர் இருக்கிறது. வட்டார மொழியில் அவர் பேசுவதைக் கேட்க சுவாரசியமாக இருக்கும் – என்பதெல்லாம் உண்மைதான்.

அதற்காக, தேசிய ஊடகங்களில் – எல்லா தரப்பு மக்களும் பார்க்கும் நேரடி நிகழ்ச்சிகளிலும், தனது வட்டார வித்தயை அதாஉல்லா காட்ட முயற்சிக்கக் கூடாது.

அதாஉல்லாவின் பாசையிலேயே சொல்வதென்றால் இடம், பொருள், ஏவல் என்கிற ‘சாமான்களை’யெல்லாம், கவனத்திற் கொண்டு பேசுவது எல்லோருக்கும் சிறப்பாக அமையும்.

தொடர்பான செய்திகள்:

01) அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

02) தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்