மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

🕔 November 25, 2019

க்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் புதிய ஆட்சியை, கொண்டு செல்வோம். என சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை பதவிகளை பொறுப்பேற்ற பின் ஊடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான பெரும்பான்மை மக்களினதும் சிறிய அளவிலான சிறுபான்மை மக்களினதும் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாம் செயற்படுவோம்.அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவோம்.

கடந்த நான்கு அரைவருட கால ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் அனைத்தையும் முறையாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்போம்.அதே போன்று அமைச்சு நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் விசாரணை செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அமைச்சு நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொழிற் சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து நிறைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்றி முறையான பொறிமுறை ஊடாக அவற்றை விசாரித்து தீர்வு பெறுவதும் எதிர்காலத்தில் நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெறாத வண்ணம் பாதுகாப்பதும் அரசின் நோக்கமாகும். அந்த வகையில் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அத்துடன் அமைச்சின் எதிர்கால வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு தொடர்பில் ஊடகவியாலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; “குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் சஹ்ரானுடன் தொடர்புபட்டவர்கள் உதவி செய்தவர்கள், தீவிரவாதத்துக்கு ஒத்துழைத்தோர் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்” என்றார்.

மிலேனியம் ஒப்பந்தத்தில் இந்த அரசாங்கம் ஒரு போதுமே கையெழுத்திடாது என்றும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்