கிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல்

🕔 November 22, 2019

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மு.கா. தலைவர் ஹக்கீம் இதுவரை ஆதரவு வழங்கிய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றியடையவில்லை என்பதன் மூலம், அவர் தோல்வியடைந்த ஒரு தலைவராக அடையாளப்பட்டுள்ளார்.

மு.காங்கிரஸ் தலைவரை அவரின் கட்சிக்காரர்கள் ‘சாணக்கிய தலைவர்’ என்று அழைக்கின்ற போதும், பொது அரசியலில் மு.கா. தலைவர் சாணிக்கியமற்றதொரு அரசியல் தலைவராகவே உள்ளார்.

சாணக்கியம்’ என்றால் ‘தந்திரம்’ என்று பொருள்படும். மு.கா. தலைவர் தனது சொந்த அரசியலிலும், கட்சிக்குள் மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலும், தனது தலைமைத்துவத்தைத் தக்க வைப்பதிலுமே சாணக்கியம் என்கிற தந்தரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றார். ஆனால், பொது அரசியலில் அவரின் சாணக்கியம் – ஒரு குள்ள நரியின் தந்திரத்துக்கு கூட ஈடாக இல்லை என்பதை, ஜனாதிபதி தேர்தல்களில் அவர் எடுத்த தீர்மானங்கள் பறைசாற்றுகின்றன.

மு.காங்கிரஸ் தலைவர் – கிழக்கு மாகாண மக்களை மட்டுமே தனது அரசியலுக்குப் பலிக்கடா ஆக்கி வருகின்றமையினை, இந்த முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வைத்து அவதானிக்கலாம்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – கிழக்கு மாகாண மக்கள் அனைவரையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்கும் படி, உணர்ச்சி ஊட்டிய போதிலும், தனது சொந்த தொகுதியான கலகெதர பகுதியில், கோட்டாவுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் அறிவுறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு கலகெதர தொகுதி தேர்தல் முடிவு சாட்சியாக அமைந்துள்ளது.

கண்டி மாவட்டம் கலகெதர தேர்தல் தொகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ 24,829 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 16,839 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்படி, தனது தொகுதியையே ஹக்கீமால் வெல்ல முடியவில்லை என்கிற பார்வை ஒருபுறமாக இருந்த போதும், அதன் உண்மை என்னவென்றால், தேர்தல் காலத்தில் கலகெதர பகுதியிலுள்ள தனது கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்த ஹக்கீம்; “கோட்டாவுக்கு எதிராக அதிகம் ஆட வேண்டாம், அடக்கி வாசியுங்கள்” என்று அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது, தனது சொந்த தொகுதி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று திட்டமிட்டு, தந்திரமாக வழி நடத்திய ரஊப் ஹக்கீம், கிழக்கு முஸ்லிம் மக்களை, அதே தந்திரத்தைப் பயன்படுத்தி பலிகொடுத்துள்ளார் என்பது குரூரமான செயற்பாடாகும்.

“கிழக்கு மக்கள் முட்டாள்கள், அவர்களை முட்டுக்காலில் வைப்பேன்” என்று கூறிய சபீக் ரஜாப்தீன் போன்றவர்களையும், தனது மைத்துனர்கள், சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தாரையும் தனக்குக் கிடைக்கும் அமைச்சுகளில் உயர்ந்த – அதிக சம்பளத்தைக் கொண்ட தொழில்களில் அமர்த்தும் ஹக்கீம், அவ்வாறானவர்களுக்கே கட்சிக்குள்ளும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றார்.

கிழக்கு மாகாண மக்களை பலிகொடுத்து அரசியலில் மிக நீண்டகாலமாக வயிறு வளர்த்து வரும் ஹக்கீமுடைய செயற்பாட்டினால், இன்று தேசிய அரசியலில் முஸ்லிம் சமூகம் அநாதையாகி நிற்கிறது.

இன்று உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் கூட, முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாத அளவுக்கு, ஆட்சியாளர்களை கோபத்துக்கும் கசப்புக்கும் ஹக்கீம் ஆளாக்கியிருக்கின்றார்.

இனி கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்கள் ரஊப் ஹக்கீமை நிச்சயம் புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு உண்மை நிலைவரம் விளங்கத் தொடங்கி விட்டது. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்குக்கு வெளியில் தனது ‘பருப்பு’ வேகாது என்பதனால், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை போன்ற ஒரு மாவட்டத்தில்தான் நிச்சயம் ஹக்கீம் போட்டியிடுவார்.

இதன் மூலம், அம்பாறை மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை, பின் கதவு வழியாக ஹக்கீம் திருடிச் செல்லும் நிலைவரம் ஏற்படும்.

அப்போதும் “நாரே தக்பீர்” சொல்லி முழங்கும் ஏமாளிகளாகத்தான் இருக்கப் போகிறீர்களா என்பதை, கிழக்கு முஸ்லிம்கள் இப்போதே யோகிக்கத் தொடங்க வேண்டும்.

தொடர்பான செய்தி: புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்