ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

🕔 November 20, 2019

டந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறங்கிய சஜித் பிரேமதாஸ ஆகியோர் மட்டுமே, கட்டுப்பணத்தை மீண்டும் பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாயும், சுயேச்சையாகப் போட்டியிடுவோர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்துதல் வேண்டும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 18 பேரும், ஏனைய அரசியல் கட்சிகள் சார்பாக 2 பேரும், சுயேச்சையாக 15 பேரும் போட்டியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணத்தைச் செலுத்தியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

வேட்பாளர்களின் வாக்கு வீதம்

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாஸ 41.99 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மூன்றாமிடத்தைப் பெற்ற அனுர குமார திஸாநாயக்க 3.16 வீதமான வாக்குகளையும், நான்காவது இடத்திலுள்ள மகேஷ் சேனநாயக்க 0.37 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

ஏனைய 31 வேட்பாளர்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் வீதம் 2.23 ஆகும்.

இவர்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து களமிறங்கிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 38,814 (0.29 வீதம்) வாக்குளையும், தமிழர் சமூகத்திலிருந்து களமிறங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் 12,256 (0.09 வீதம்) வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

வாக்கு விவரம்

இம்முறை 1,59,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதிலும், 1,33,87,951 பேர்தான் வாக்களித்திருந்தனர்.

அந்த வகையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 26,04,145 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1,35,452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்