பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது

🕔 November 9, 2019

ந்தியாவின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், ஒக்டோபர் 16ம் திகதி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாபர் மசூதி 1992 டிசம்பர் 06 ஆம் திகதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு அது அமைந்திருந்த நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் 2010 செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில் ராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சுன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மூன்று தரப்பும் செய்த மேல்முறையீடு மீதுதான் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்