சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

🕔 November 8, 2019

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ,  அலட்சியமாகவோ  இருந்துவிடக்  கூடாது.

கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நொறுக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபார ஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை இல்லாமலாக்கியவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர். இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்ல வையுங்கள்.

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரியவெற்றியை பெறுவார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்ல வேண்டும், நீதி வாழவேண்டும்.

இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அழிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு  வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பெருவாரியான பணத்துடன் வந்துள்ள இந்த கோடரிக்காம்புகள் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் முகாமிட்டு வாக்கு கேட்கிறார்கள், கற்றை கற்றையாக காசை அள்ளி  விசுறுகிறார்கள். போதாக்குறைக்கு இங்குள்ள சில பணக்காரர்களும் இந்த சதிக்கு துணைபோவதாக அறிகிறோம்.

பணத்தை காட்டி வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். சோரம் போய்விடாதீர்கள். அவர்கள் தந்தால் கனிமத்துப்பொருட்கள் (யுத்தத்தில் கைப்பற்றப்படும் பொருட்கள்) என நினைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்கு கேட்க முடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன்  மூலம், நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்றார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், மனோகணேசன், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், அஸ்லம், முத்தலி பாவா  பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், அலிகான் ஷரீப், நியாஸ், பாயிஸ், பிரதேசபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், செல்லத்தம்பு உட்பட பலர் உரையாற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்