கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

🕔 October 30, 2019

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தமது இந்தத் தீர்மானம் குறித்து ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்;

‘பொதுஜன பெரமுனவுடன், ஐக்கியசமாதானக் கூட்டமைப்பு மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அண்மையில் நடத்தியிருந்தது. அப் பேச்சுவார்த்தைகளின் போது, சிறுபான்மை மக்களின் விசேடமாக – முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் மற்றும் சமகாலத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளும் விரிவாகவும், ஆழமாகவும் ஆராயப்பட்டன.

இதன்போது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்த 13 அம்சக் கோரிக்கைகளுக்கு சாதகமாக, பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான எழுத்து மூலஉடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

எல்லாப் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினாலும் நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு என்ற விடயத்தில், இந்நாட்டின் முஸ்லிம் சிறுபான்மைமக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கியிருக்கிறது என்பதையும், இது குறித்துவிசேடகவனம் செலுத்தப்படவேண்டும் என்பதையும், நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பொதுஜன பெரமுன ஏற்றுக் கொண்டுள்ளது.

எவ்வாறு இலங்கையின் தேசிய அரசியல் 1956ல் பாரிய மாற்றங்களைக் கண்டதோ, அவ்வாறானதொரு பாரிய மாற்றத்துக்கு தேசிய அரசியல் தயாராகி வரும் ஒரு காலகட்டத்தில்,பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற விடயங்கள் குறித்து, இலங்கை முஸ்லிம் மக்கள் புதியஅரசியல் விழிப்புணர்வை அடைய வேண்டியிருக்கிறது.

அவ்வாறே 80களில் இனப் பிரச்சினை – வன்முறை வடிவம் எடுத்தபோது, முஸ்லிம்களின் அரசியல் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் கவனத்தில் எடுத்து, முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

அதேபோல 2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும், இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான எல்லா விடயங்களையும் எமது கட்சி கவனத்தில் எடுத்துக் கொண்டது.

அத்துடன் இனி நாம் புதிய சூழ்நிலையில் செய்ய வேண்டியுள்ள அரசியல், முஸ்லிம்கள் இதுவரை காலமும் செய்து வந்த அரசியலல்ல என்பதையும், யதார்த்தமாய் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களின், பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியும், அதன் வேட்பாளருமே, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளையும், நலன்களையும் பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சென்று, சந்தைப்படுத்தும் தகுதியைப் பெற்றவராகிறார். இத்தகுதி சிறுபான்மை மக்களுக்குள், பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சிக்கோ, அதன் வேட்பாளருக்கோ கிடையாது என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இலங்கையின் இன்றைய புதிய தேசிய அரசியற் சூழலில் மேற்கூறிய இப்புதிய விடயம், எமது கட்சியினால் தெளிவாகவும், ஆழமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அன்றைய அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய தலைமைத்துவ வரவுக்கு சிறுபான்மை மக்களாகிய நாம், ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம். ஆனால் அந்த ஆதரவு சிறுபான்மை மக்களுக்கு ஒட்டுமொத்த ஏமாற்றத்தையும், தோல்வியையுமே தந்தது என்பதே வரலாறாகியுள்ளது.

இதுபோல ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையும், தோல்வியையும் அடையாதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வே தற்போது நமது கட்சி எடுத்திருக்கும் இத்தீர்மானத்துக்கு எம்மைத் தூண்டியுள்ளது.

அந்த அடிப்படையில், ஆளைப்பார்த்து ஆதரவு அளிப்பது என்பதாக அல்லாமல், நாட்டின் அரசியல் நிலவரங்களை கவனத்திற் கொண்டு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை நமது கட்சி எடுத்துள்ளது.

ஆகவே தெளிவான ஆய்வு அடிப்படையிலான இத்தீரமானத்தை மனங்கொள்ளுமாறு முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் அரச சேவையாளர்களையும் கேட்டுக்கொள்வதோடு, இதனை ஏற்று பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள முஸ்லிம் சிறுபான்னை அரச சேவையாளர்களையும், மக்களையும் கட்சி வினயமாககேட்டுக் கொள்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் பதவி வகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்