சஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்

🕔 October 21, 2019

– மப்றூக் –

“ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார்.

ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ அன்சில், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி மற்றும் மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி எம். முஷர்ரப் உள்ளிட்ட பலர் இந்த ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்;

அபூதாலிப் மற்றும் அபூஜஹீல் இருவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. ஆனால், முகம்மது நபியுடன் அன்பு கொண்டவராக அபூதாலிப் இருந்தார். அபூஜஹீலோ முஸ்லிம்களின் கடும் பகைவனாக இருந்தார்.

அந்த இருவர் போன்றுதான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் நாம் பார்க்கிறோம். சஜித் பிரேமதாஸ அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ அபூஜஹீல் போன்றவராவார்.எனவே, இந்த இருவரில் யார் முஸ்லிம்களின் தெரிவு என்பதே கேள்வியாகும்” என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

கேள்வி: மைத்திபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஆதரவு வழங்கியபோது, அவரைப் பற்றியும் இவ்வாறுதான் நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கூறினீர்கள். ஆனால், பின்னர் அவர் மாறு செய்தார். அதேபோன்று சஜித் பிரேமதாஸவும் வெற்றி பெற்ற பின்னர், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

பதில்: அதற்காக கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முடியாது. அவர் யாருடைய ஆலோசனைகளையும் கேட்க மாட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, பொதுபல சேனாவின் அலுவலகத்தை திறப்பதற்கு கோட்டா செல்லவிருந்தார். அப்போது, நாங்கள் மஹிந்தவிடம் சென்று, கோட்டாவை அங்கு போக வேண்டாம் என்று கூறுமாறு கேட்டோம். மஹிந்த எங்கள் எதிரில் கோட்டாவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, அந்த அலுவலகத்தை திறந்து வைக்க வேண்டாம் என்று கூறினார்.

அதன் பிறகு தொலைபேசியை என்னிடம் மஹிந்த தந்தார். அப்போது கோட்டாவிடம் பொதுபலசேனாவின் அலுவலகத்தை திறந்து வைக்கச் செல்ல வேண்டாம் என்று கூறினேன். அதற்கு கோட்டா; “யார் சொன்னாலும் நான் அங்கு செல்வேன்” என்றார்.

அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் யாரின் சொல்லையும் கணக்கில் எடுக்க மாட்டார். அவருக்கு நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம்.

கேள்வி: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட சம்பிக்க ரணவக்க போன்றோர் இருக்கும், சஜித் முகாமில் எப்படி உங்களால் இருக்க முடிகிறது?

பதில்: அப்படியென்றால் எனக்கு வேறொரு முகாமைக் காட்டுங்கள். எதிர் முகாமில்தான் இனவாதிகள் அதிகமாக உள்ளனர். முஸ்லிம் சமூகத்தை சம்பிக்க அடக்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கேள்வி: காலி முகத்திடலில் நடைபெற்ற சஜீத் ஆதரவு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உங்களுக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் உண்மை என்ன?

பதில்: அந்தக் கூட்டத்தில் எனக்கும், ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கும் ஆளுக்கு 10 நிமிடங்கள் உரையாற்றுவதற்கு நிகழ்ச்சி நிரலில் இடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும், நாங்கள் எங்களுக்குள் பேசி, அந்த சந்தர்ப்பத்தைத் தவிர்த்துக் கொண்டோம்.

எம்மைப் பேச வேண்டாம் என்று, வேறு யாரும் கூறவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்