ஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா

🕔 October 16, 2019

பாறுக் ஷிஹான்

மு.கா. தலைவர் ஹக்கீம் – கிக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிவதாகவும், ஹிஸ்புல்லாஹ்வை துரோகி  என்று ஹக்கீம் கூற முடியாது எனவும்  முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை ஆதரித்து  நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம். மயோன் முஸ்தபா ஒழுங்குசெய்திருந்த  மக்கள் கலந்துரையாடல், கல்முனையில் நடைபெற்ற போதே, இவ்வாறு அவர் கூறினார்.

அவர் தெரிவிக்கையில்;

“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில்தான் முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. ஆனால் இன்று முஸ்லிம் மக்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கான அனுமதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை காணப்படுவதை அவதானிக்கலாம்.

2015ல் அளுத்கமவில் இடம்பெற்ற இனக்கலவரத்தை இரவோடு இரவாக அமைதிக்கு கொண்டுவந்ததும் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களது பாதுகாப்பை இல்லாமல் செய்தவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். குறிப்பாக 18ம் திருத்தத்திற்கு ஆதரவாக கைகளை தூக்கியவர்களும் இவர்கள்தான். ஆகவே 2015 வரை இடம்பெற்ற அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு இவர்களுக்கு உண்டு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கு எதுவித ஒப்பந்தங்களும் இன்றி தமது ஆதரவை மு.கா. தலைவர் தெரிவித்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு வருகின்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர்  மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பகிடி பண்ணிக்கொண்டு கோமாளியாக திரிகின்றார்.  

போராட்டம் போராட்டம் என்று கூறும் இவர், முஸ்லிம் காங்கிரஸின் போராட்டத்தின் வெற்றி என்ன என்று கூற வேண்டும்? எதற்காக இந்த போராட்டம்? வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த போராட்டத்தின் மூலம் கிடைத்த நன்மை தான் என்ன? ஒன்றுமில்லை. பழைய பாடல் பாடும்  முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் எதுவித தகுதியுமற்றவர்கள் என்பதை கூற விரும்புகின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்