முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா?

🕔 October 14, 2019

– அஹமட் –

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின் அரசியலுக்கு ‘பொறி’ வைப்பது, இந்த முயற்சியின் இலக்காக இருக்கலாம் என்கிற சந்தேகம் இதனால் எழுந்துள்ளது.

உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதற்கு பின்னணியிலுள்ள மேற்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரிருக்கும் இடையில் நீண்டகாலமாக ‘புகைச்சல்’ இருந்து வருகின்றமை, இந்த சந்தேகம் எழுவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரை அடக்கி வைப்பதற்காக, உதுமாலெப்பையை கட்சியில் சேர்ப்பதற்கு மு.கா. தலைவரும் விரும்புவார் என்கிற பேச்சுக்களும் உள்ளன.

கடந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் மு.கா. தலைவர் ஹக்கீமை பெரும் நெருக்கடிக்குள்ளாகியே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நஸீர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நஸீரின் அந்த நடவடிக்கை தொடர்பில் ஹக்கீம் கடும் விசனம் கொண்டிருந்ததாகவும் அப்போது கட்சிக்குள் பேசப்பட்டது.

எனவே, உதுமாலெப்பையை கட்சியில் இணைத்து, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைக்கான அதிகாரத்தின் ஒரு பகுதியை அவரிடம் ஒப்படைப்பதன் மூலம், நஸீரின் ஏகபோக அரசியலுக்கு முடிவுகட்ட மு.கா. தலைவர் விரும்பலாம் எனவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து கொண்டால், தற்போது நஸீரிடமுள்ள அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனைக்குரிய அரசியல் அதிகாரத்தை, ஒரு கட்டத்தில் உதுமாலெப்பையின் கைக்கு எடுத்து விடலாம் என, உதுமாலெப்பையின் தரப்பும் நம்புகிறது.

30 வருட அரசியல் அனுபவங்களைக் கொண்ட உதுமாலெப்பைக்கு, அதனைச் சாதிப்பது கடினமான காரியமாகவும் இருக்காது என்பதே, அநேகமானோரின் அபிப்பிராயமாகும்.

இதேவேளை, மு.காங்கிரஸில் இணைந்து கொள்ளவுள்ள உதுமாலெப்பைக்கு, கட்சிக்குள் முக்கிய இடத்தை வழங்குவதற்கு மு.கா. தலைவர் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

தொடர்பான செய்தி: மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்