அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

🕔 September 28, 2019

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில் குரீகொடுவ பிரதேசத்தில் காபட் வீதியாக விஸ்தரிக்கப்பட்ட சின்னகொல்ல வீதியை இன்று சனிக்கிழமை திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“தவறாக வழிநடத்தப்பட்ட சிறியதொரு கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னணியில் தொடர்ந்தும் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்ற சமூகமாக முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெதிராகப் போராடி, ஓரளவுக்காவது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழ்நிலையில் எதிர்கால ஆட்சி தொடர்பில் என்ன முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற நிலைக்கு மக்கள் எல்லோரும் வந்திருக்கிறோம்.

இந்த நிலையிலும் நாங்கள் கடந்தகால சம்பவங்களை மறந்துவிடாமல், சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதன் விளைவாக, என்ன தாக்கங்களை ஏற்படுத்த முடிந்ததோ, அதேபோன்று எதிர்காலத்திலும் இந்த ஒற்றுமையை பேணுவதுதான் எங்களுக்கான சிறந்த வழியாக இருக்கும் என்பதை நாங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

நாட்டைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களுடைய எதிர்காலம் குறித்த விடயத்தில் எல்லோரும் மூக்கு நுழைக்கின்ற காலமாக இது மாறியிருக்கின்றது. வேறு யாரும் எங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதை விட, நாங்களாகவே எங்களது விடயத்தில் ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு வரவேண்டும்.

எங்களது அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் பலவற்றை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அடிக்கடி பலவிதமான கலவரங்களையும் அனர்த்தங்களையும் அட்டூழியங்களையும் சந்தித்திருக்கிறோம். அவற்றின் வெளிப்பாடாகத்தான், குருணாகல் மாவட்டத்தில் மிகப்பெரிய அனர்த்தங்களை நாங்கள் எல்லோரும் சந்திக்க நேரிட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து மீண்டுவரும் நிலையில், இல்லாத பொல்லாத பழிகளை எங்களது சமூகத்தின் மீது சுமத்தும் நோக்கில் வைத்திய நிபுணர் ஒருவருக்கெதிரக அரங்கேற்றப்பட்ட சதி எல்லோருக்குமே தெரியும். நாங்கள் நீதி, நியாயத்துக்காக நீண்ட நாட்களாக போராடிபோதும், நாட்டில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை நாங்கள் எல்லோரும் கண்கூடாகப் பார்த்தோம்.

எந்த ஆதாரமும் இல்லாமல், முஸ்லிம் என்ற காரணத்துக்காக வேண்டுமென்றே பழிசுமத்துகின்ற விடயத்தில் நாங்கள் எல்லோரும் வேற்றுமைகளை மறந்து தெளிவாக பேசவேண்டிய இடங்களில் பேசியிருக்கிறோம். கடைசியில் குற்றம் சுமத்திய எல்லோரும் வெட்கித் தலைகுனிகின்ற அளவுக்கு பின்வாங்க வேண்டிய ஒரு நிலவரம் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதே விவகாரங்களையும் விசமத்தனமான பிரசாரங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் புதிய பிரசாரங்கள் ஆரம்பிக்கும். இந்த விடயங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்கால முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது. கொஞ்சம் துணிகரமான விதத்தில் இவற்றை எதிர்கொள்வதற்கு எங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது நாங்கள் பிறந்த நாடு. எங்களுடைய சந்ததிகள் வாழவேண்டிய நாடு. அதற்கு கௌரவமாக கண்ணியமாக பின்புலத்தை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக எங்களுக்கிருக்கின்ற அத்தனை பலத்தையும் பிரயோகித்து, தைரியமாக நியாயத்துக்காக பேசுகின்ற ஒரு சமூகமாக எங்களை இனங்காட்டிக் கொள்ள வேண்டும்.

நெருக்கடிகளிலிருந்து இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களது வாழ்க்கையை திருப்திகரமாக மாற்றிக்கொள்வதற்கான பின்புலத்தை நாங்கள் அமைத்தாக வேண்டும். அதற்காக எங்களது கைகளில் இருக்கும் வாக்குரிமை என்ற ஆயுதத்தை மிகப் பக்குவமாக பாவித்தாக வேண்டும். அப்போதுதான் நாங்கள் எதிர்பார்க்கின்ற வெற்றியை அடைந்துகொள்ள முடியும்” என்றார்

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரவு)

Comments