ஓடாத குதிரையின் பந்தய கனவு

🕔 September 25, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

மைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.  

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது என்பதை ஊகிக்க முடிந்தது.  

சூழ்நிலைக் கைதி  

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாஸவையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.   

இந்த நிலைவரமானது, ரணில் விக்கிரமசிங்கவை ஒரு சூழ்நிலைக் கைதியாக மாற்றியது. சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலைமைக்கு ரணில் தள்ளப்பட்டார்.  

ஆயினும் இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக, பல்வேறு உபாயங்களை ரணில் விக்கிரமசிங்க கையாள முயன்றமையை நாம் கண்டோம். ஆனால், அவை எதுவும் பலிக்கவில்லை.   

அதனால்தான், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான ஒரு முயற்சியை, ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். அதிகாரங்கள் எவையுமற்ற ஒரு ‘வெற்று’ ஜனாதிபதி பதவிக்குரிய வேட்பாளராக, சஜித் பிரேமதாஸவை அறிவிப்பதே, அந்த முயற்சியின் நோக்கமாகும்.  

ரணில் விக்கிரமசிங்க மிகப்பெரும் இராஜதந்திரியாகப் பார்க்கப்பட்டவர். சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாகக் கையாளுவதில் அவர் ஆளுமை மிக்கவர் எனப் பெயரெடுத்தவர். ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது, அவரை வேறுவிதமாகக் காட்டியது.   

தனக்குக் கிடைக்காத மிட்டாய் மீது மண்ணை அள்ளி வீசும் ஒரு சிறுவன் போல், இதன்போது அவர் பார்க்கப்பட்டார். இந்தச் சித்திரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகத்தான், ‘நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கான தீர்மானத்தை எடுப்பதற்குரிய அமைச்சரவைக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு நான் கோரவில்லை’ என்று, ரணிலுக்கு அறிக்கை விட நேர்ந்தது.  

ஓடாத குதிரை   

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விரும்பம் உள்ளமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.   

அதைவிடவும், சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி விடக் கூடாது என்பதில், அவர் மிகவும் கவனமாகவும் இருக்கின்றார். ஆனால், அவரின் இந்த இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு, நிலைமை சாதகமாக இல்லை.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக, ரணில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எதிர்கொண்ட சுமார் 30 தேர்தல்களில், அந்தக் கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்த நிலைமையானது, ‘வெல்ல முடியாதவர்’ என்றதொரு முத்திரையை, ரணில் விக்கிரமசிங்க மீது குத்தியுள்ளது.   

அதனால்தான், இவரைக் களத்தில் இறக்குவதற்கு ஐ.தே.கட்சிக்காரர்களும் அந்தக் கட்சியின் பங்காளிகளும் பயப்படுகின்றனர். ‘ஓடாத குதிரை மீது பந்தயம் கட்டுவதற்கு அவர்கள் விரும்பவில்லை.  

தனது ‘தோல்வி முகம்’ குறித்து ரணில் விக்கிரமசிங்கவும் அறிவார். அதனால்தான் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் அவர் போட்டியிடாமல், பொது வேட்பாளர்களைக் களமிறக்குவதற்குச் சம்மதித்தார். ஆனாலும் 70 வயதைக் கடந்துள்ள நிலையில், ‘இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தடவை முயற்சித்துப் பார்த்தால் என்ன’ என்று அவர் யோசித்திருக்கலாம்.  

ஆனால், இந்த விசப் பரீட்சைக்கு அவரின் கட்சிக்காரர்களும் பங்காளிகளும் தயாராக இல்லை. “கட்சித் தலைவராகவும் பிரமதமராகவும் கூட நீங்கள் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் செல்வாக்குள்ள சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குங்கள்” என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குவதற்கு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும், ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என, ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, எந்த முடிவுக்கும் நாம் வந்து விட முடியாது.  

ரணில் – சஜித் அணிகள்  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாகவும் மறைமுகமாகமாகவும் மிக நீண்ட காலமாகவே சஜித் பிரேமதாஸ பொருதிக் கொண்டிருக்கின்றார். இந்நிலைவரமானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில், சஜித் சார்பான இரண்டு அணிகளை உருவாக்கியது.   

இதனையடுத்து சஜித் ஆதரவு அணியில் இருப்பவர்களைத் தருணம் பார்த்து, ரணில் ‘வெட்டுகிறார்’ என்கிற குற்றச்சாட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ளது. அதனால், சஜித் ஆதரவாளர்கள் கட்சிக்குள் சற்று அடக்கி வாசித்தே வந்தனர். ஆனாலும், ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சுகள் எழத் தொடங்கியதிலிருந்து, சஜித் தரப்பினர் தமது குரல்களை உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.  

இவ்வாறான நிலையில், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க அறிவித்தாலும், அவரின் வெற்றிக்காக ரணில் சார்பு அணியினர் உழைப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது.   

சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, முழு ஐக்கிய தேசியக் கட்சியும் மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி, வேலை செய்தாலும் கூட, அவர் வெற்றி பெறுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக உழைக்காமல், ரணில் சார்பு அணியினர் ஒதுங்கியிருப்பார்களாயின், எதிரணி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு இலகுவாகி விடும்.  

அதற்கும் மேலாக, எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை, சஜித் பிரேமதாஸ வெற்றிபெறக் கூடாது என்கிற கங்கணத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் சார்பு அணியினர் செயற்படுவார்களாயின் எதிரணி வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாகிவிடும்.  

கணக்கு  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்துக் களமிறங்கிற மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு வழங்கிய நிலையிலும், 04 இலட்சத்து 49 ஆயிரத்து 072 வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரியால் வெற்றி பெற முடிந்தது.  

ஆனால், இம்முறை மக்கள் விடுதலை முன்னணி தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்குக் கிடைக்க, சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.  

 இவை போக, பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் அதிகளவு வாக்குகள் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்திருக்கின்றன. இவற்றினையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கினாலும், அந்தக் கட்சி வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும் என, கணக்குச் சொல்லுகிறது.  

இப்படியான நிலையில், ரணில் ஆதரவு அணியானது ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்குக் குழி பறிக்கும் வேலைகளில் இறங்கினால், அந்தக் கட்சிக்கான வெற்றி என்பது,  குதிரைக் கொம்பாகவே போய்விடும்.  

எனவே, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அறிவித்து விட்டால் மட்டும் போதாது. சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் சார்பு அணியினர், நேர்மையாக உழைக்க வேண்டியும் உள்ளது.   

ஆனால், அதனை சஜித் அணியினர் பெற்றுக் கொள்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கும் எனக் கூறிவிட முடியாது. அந்தவகையில், எதிரணியிலுள்ள வேட்பாளருடன் போட்டியிட்டுக் கொண்டே, உட்கட்சிக் குழிபறிப்புகளையும் எதிர்கொண்டவாறுதான் தனது வெற்றியை நோக்கி, சஜித் பிரேமதாஸ பயணிக்க வேண்டியதொரு நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.   

தமிழ், முஸ்லிம் மக்களின் மனநிலை  

மறுபுறம், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கினாலும் தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்தமை போன்று, இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது.  

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், தம்மீது மேற்கொள்ளப்பட்ட அக்கிரமங்களை விடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய ஆட்சியில்தான் அதிகமான அக்கிரமங்கள் புரியப்பட்டுள்ளன எனும் மனநிலையில் அவர்கள் உள்ளனர்.   

எனவே, கடந்த தேர்தலில் முஸ்லிம்களிடம் இருந்தளவு மஹிந்த விரோத மனநிலை, இந்தத் தேர்தலின் போது இருப்பதற்குச் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. அதேபோன்று, தமிழர்களும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தொடர்பில் ஏமாற்றமடைந்த நிலையிலேயே உள்ளனர்.  

இந்த நிலைவரங்களெல்லாம், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்குப் பாதகமான களநிலையை உருவாக்குவதில் ஆதிக்கம் செலுத்தும்.  

இன்னொருபுறம் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எந்த வேட்பாளரை விரும்பப் போகின்றன என்பதிலும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.   

ஏற்கெனவே ராஜபக்‌ஷ தரப்பினருக்குச் சீனாவின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. மட்டுமன்றி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்காவின் முன்னாள் பிரஜை என்பதும் கவனத்துக்குரியது.  

கூட்டிக்கழித்துப் பார்த்தால், சாதகமற்றதொரு காலநிலையில் தனது படகைக் கடலில் செலுத்த வேண்டியதொரு மாலுமியின் நிலையிலேயே சஜித் பிரேமதாஸ உள்ளார்.   

ஆனால், இந்தக் கடுமையான களநிலைவரங்களை எதிர்கொள்வதற்கான அனுபவங்களும் ஆளுமையும் சஜித் பிரேமதாஸவிடம் உள்ளனவா என்கிற கேள்விகளும் பரவலாக உள்ளன.  

சஜித் பிரேமதாஸ, சுமார் 20 வருட நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவம் கொண்டவர். பிறந்ததில் இருந்தே அமைச்சராக, பிரதம மந்திரியாக, ஜனாதிபதியாகத் தனது தந்தையையும் அவரின் அரசியலையும் பார்த்து வளந்தவர். இந்தத் தகுதிகளும் அனுபவங்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அவருக்குக் கை கொடுக்குமா என்பதை இப்போதைக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது.  

ஆனாலும், இப்படியான நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகளையும் கள நிலைவரங்களையும் எதிர்கொண்டுதான் சஜித்தின் தந்தையார் ரணசிங்க பிரேமதாஸ, முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டார் என்பது, சஜித் அணியினருக்கு ஆறுதலான வரலாறாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (24 செப்டம்பர் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்