சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

🕔 September 20, 2019

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். பாடசாலை அதிபர் எஸ். நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;

“தேசிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் – நிதானத்துடனும் சமூகப் பொறுப்புடனும் தூர சிந்தனையுடனும் செயற்பட்டு வருகிறோம். நாட்டுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் ஏற்ற சிறந்த மக்கள் தலைவர் ஒருவரை அடையாளப்படுத்தும் எமது பகீரத செயற்பாட்டுக்கு வெற்றிகிட்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்.

கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்புக்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், எமது காலத்தையும் நேரத்தையும் அதற்காக செலவழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எங்களால் எடுக்கப்படும் முடிவுகள், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களை, பெரும்பான்மை மக்கள் அரவணைத்து செல்லக்கூடிய சூழலையும் அனைத்தினங்களையும் ஒற்றுமையாக வாழச் செய்யும் நிலைமையையும் ஏற்படுத்தும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இனங்களுக்கிடையில் வாஞ்சை ஏற்படவும் புரிந்துணர்வு ஏற்படவும் சிறுபான்மை கட்சிகளின் முயற்சிகள் வெற்றிபெறவும் இறைவனை பிரார்த்தியுங்கள்.

ஒரு பாடசாலையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பவை அந்த பாடசாலையின் மாணவர்களது இறுதிப் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் உள்ளடங்கிய பாடசாலை சமூகத்தின் இதய சுத்தியான முயற்சிகளே அந்த பாடசாலையின் வளர்ச்சிக்கும் நல்ல பெறுபேறுகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றது. அந்த வகையில் வளங்களோ போக்குவரத்து வசதிகளோ குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களின் உந்துதலினாலும் தியாக உணர்வினாலும் நல்ல பெறுபேறுகளை பெறுகின்றனர். அதற்கான வரலாறுகள் நிறையவே உண்டு.

அதிபர்களும் ஆசிரியர்களும் ஒவ்வெரு மாணவர் மீதும் முடிந்தளவு தனிப்பட்ட கவனத்தை செலுத்தினால் அந்த பாடசாலையின் அடைவு மட்டம் உயர்வடையும். இதுவே யதார்த்தமனது. அது மாத்திரமின்றி ஒவ்வொரு பாடசாலைகளிலும் அந்தந்த பாடசாலைகளுக்கென பிரத்தியேக கொள்கை வகுக்கப்படுவது சிறந்த நடைமுறையாகும். ஏனெனில் காலவோட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரோ ஆசிரியரோ இடம்மாறி சென்றாலும் பாடசாலைக்கென பிரத்தியேக கொள்கைகள் நிலைப்படுத்தப்பட்டிருந்தால், குறிப்பிட்ட பாடசாலை சரியான இலக்கை எய்த முடியும்.

இந்த பிரதேசத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை முடிந்தளவில் செய்திருக்கின்றோம். கல்வி வளர்ச்சிக்காகவும் நாம் உதவி இருக்கின்றோம். அந்த வகையில் எதிர்காலத்திலும் நாம் உதவியளிப்போம். இந்த பிரதேசத்தில் வாழும் மக்களாகிய நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்காக பிணக்குப்படவே கூடாது. நமக்குள் ஏற்படும் ஒற்றுமையே எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் விடிவுக்கு உதவும்” என்றார்.

இந்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வெண்கல செட்டிகுளம் பிரதேசபை தவிசாளர் அந்தோனி, பிரதிதவிசாளர் நவரத்தினம் சுபாஜினி,அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், நகரசபை உறுப்பினர்களான பாரி மற்றும் லரிப், பிரதேசபை உறுப்பினர்களான ஹசன், மாஹிர் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முத்து முகமட் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments