கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐ.தே.கட்சியினர் ஆட்சியை கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது: அமைச்சர் மனோ

🕔 September 18, 2019

னாதிபதி தேர்தலில் “நானே வேட்பாளர்” என பிடிவாதம் பிடிப்பதை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிறுத்த வேண்டும் என்று, ஐதே.முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் தாம் சொல்வதை ஐ.தே.கட்சியின் பெரும் புள்ளிகள், கொடுத்து கேட்கவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் மனோ இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது;

‘கடந்த வருட 52 நாள் ஒக்டோபர் நெருக்கடியின் போது, நாம் அனைவரும் எமக்கு பல கோடிகள் விலை பேசி வந்த எதிரணியை நிராகரித்து, அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் போராடி வென்று, எம் ஆட்சியை நிலை நாட்டினோம்.

இவை அனைத்துக்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் விடாப்பிடியாக தங்கி இருந்தபடி தலைமை வழங்கினார்.

அன்று ஐ.தே.க நாடாளுமன்ற குழுவை அழைத்து, “நான் தலைமை வழங்கி நமது அரசாங்கத்தை மீட்டு தருகிறேன். அதற்கு பதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ரணில் கூறி இருக்க வேண்டும்.

அப்படி அவர் அன்று கேட்டிருந்தால் ஐ.தே.க நாடாளுமன்ற குழுவினர் அனைவரும் இரு கரங்களையும் (கால்களையும்கூட) தூக்கி இணங்கி இருப்பார்கள்.

ஆனால் பிறகு வருவதை ஊகித்து அறியும் தூரப்பார்வை கொண்ட தலைவராக அதை செய்ய ரணில் அன்று தவறி விட்டார்.

இன்று பெரும் பேச்சு பேசும் வேறு எந்தவொரு ஐ.தே.க அரசியல்வாதியும் அரசாங்கத்தை மீட்பதில் அன்று பெரும் பங்கு வகிக்க வில்லை. ஐ.தே.க எம்பிகள் ஐவர் கட்சி மாறி மஹிந்த பக்கம் தாவியதைகூட இவர்களால் தடுக்க முடியவில்லை.

பங்காளி கட்சி தலைவர்களாகிய நாம்தான் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தோம். நாம் ஒரேயொரு அடியை எடுத்து வைத்திருந்தால் மஹிந்தவின் அந்த கள்ள அரசாங்கம் நிலைத்திருக்கும்.

இந்நிலையில் அன்று தன்னை தேடிவந்த வாய்ப்பை நழுவ விட்ட ரணில் இன்று “நானே வேட்பாளர்” என பிடிவாதம் பிடிப்பதை நிறுத்த வேண்டும். அதேபோல் ஐதேகவின் ‘பெரும் புள்ளிகள்’ நாம் இன்று சொல்வதை காது கொடுத்து கேட்கவும் வேண்டும்.

போகிற போக்கில் இவர்கள் தமக்குள் சண்டையிட்டு மிக சுலபமாக ஆட்சியை கோட்டாவிடம் கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்