எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

🕔 September 16, 2019

யார் எதனைக் கூறினாலும், யார் எவ்வகையான தடைகளை ஏற்படுத்தினாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என்று, ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எனது பெயர் முன்வைக்கப்பட்டவுடன் அரசியல் களத்தில் வித்தியாசமான நாடகங்கள் அரங்கேற்றப்படுவதை பார்த்திருப்பீர்கள். பாரிய அச்சம் ஏற்படுகிறது. சஜித் பிரேமதாஸவினால் அச்சம் ஏற்படுவதாக திரைப்படம் கூட இப்போது எடுக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு போட்டியிட சந்தரப்பம் வழங்கப்பட மாட்டாது என்று, மொட்டு கட்சிக்காரர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர், மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட பாம்பைப் போல் துடிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு சந்தரப்பம் வழங்கப்பட மாட்டாது என்று கூறுவோருக்கு, ஒரு விடயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் இனம், மதம், கட்சி பேதமின்றி பொதுமக்களின் தோள்களில் நிச்சயமாகக் களமிறங்குவதுடன் நாட்டின் தலைமைத்துவத்தையும் பெற்றுக் கொள்வேன்.

ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் திருட்டு என்பன இடம்பெறும் இந்த ஆட்சி முறை, மாற்றப்பட வேண்டுமென முழு நாடும் ஏற்றுக் கொள்கிறது.

எனக்கு 52 வயதாகிறது. எனது ஆரோக்கியமான காலப்பகுதியாகவே இதனை நான் கருதுகிறேன்” என்றார்.

Comments