ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு

🕔 September 11, 2019

க்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதேவேளை, நேற்றிரவு, அலறி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், முக்கிய அமைச்சர்களின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

எனினும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த சஜித் பிரேமதாஸ; பிரதமருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்றார். 

சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என சஜத் தரப்பு பேச்சுவார்த்தைக்கு நேரத்தை கேட்டிருந்தது.

இருந்த போதும், அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ராஜித்த சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். 

நல்லமுறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது, அதற்கான திகதியை குறித்துகொள்வது, பேச்சை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பவை தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.

அதுதொடர்பிலான யோசனைகள் எதனையும் சஜித் தரப்பினர், முன்வைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என்ற யோசனையை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், ரணிலை பிரதமராக்குவோம் என சஜித் தரப்பினரால், வெளிப்படையாக இதுவரையிலும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்