பத்துக்கும் குறைவானோர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கு: இன்று அவரின் நினைவு தினம்

🕔 September 11, 2019

– வாசுதேவன் (இந்தியா) –

சிதறுண்ட மனநிலையில் கஞ்சா அடிக்கிறார், கழுதையை முத்தமிடுகிறார், குருவிக்கு சோறு ஊட்டி , “பறையருக்கும் இங்குதீயர் புலையருக்கும் விடுதலை. பரவோடும் குறவருக்கும் மறவருக்கும் விடுதலை”என பாடியவர்.

‘ஆறில் ஒரு பங்கு’ என்ற சிறுகதையை எழுதி அதன் முன்னுரையில்; ‘பள்ளர் பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த சகோதரர்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன்’ என எழுதுகிறார். இஸ்லாமிய மதத்தை போற்றி நபிகள் பற்றி வியந்து பாடியுள்ளார். கிறிஸ்துவத்தை பாராட்டியுள்ளார். பெண்கள் முன்னேறுவதற்கு கல்விதான் முக்கியம் என அழுத்தம் திருத்தமாக பல இடங்களில் சொன்னார்.

அவர் ‘காந்தாமணி’ என்ற சிறுகதையில் குழந்தை திருமணத்தை சாடுகிறார். ‘பூலோக ரம்பை சிறுகதையில் பெண்களை பொட்டுக்கட்டும் வழக்கதை சாடுகிறார். ‘துளசிபாய்’ என்ற சிறுகதையில் கணவனை இழந்த ஒரு கைம்பெண் இஸ்லாமிய வாலிபரை திருமணம் செய்துகொள்கிறான். 1905இல் எழுதிய இந்தக் கதையில் ஒரு பெண் உடன்கட்டை ஏறியதை தடுத்தது, மறுமணம் புரிந்தது, மாற்று மதத்தினரை மணந்தது என மூன்று முக்கிய விடயங்களை முன்னிறுத்தியுள்ளார்.

நாளை ஆப்கன் மன்னன் அமானுல்லாகான் பற்றி எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டு படுத்தார். மகத்தான கவிகளுக்கு கடவுள் விதித்த குரூர சாபத்திலிருந்து தப்பிக்கமுடியாமல், அடுத்த நாள் செப்டம்பர் 11ம் தேதி 1921ம் வருடம் அதிகாலையில் தன்னுடைய 38 வயதில் விடைபெற்றார்.

சென்னை கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடந்தது. நீலக்கண்ட பிரம்மசாரி, குவளைக் கண்ணன், ஹோமியோபதி டொக்டர் ஜானகிராமன் என, பத்துக்கும் குறைவான நண்பர்கள் முன்னிலையில் அவருடைய இறுதிச்சடங்கு நடந்தது.

இறப்பதற்கு ஒருமாதம் முன்பு ஈரோடு கருங்கல்பாளையத்தில் அவ்வூர் காங்கிரஸ் வக்கீல் அழைப்பின் பேரில் சென்று, ஒரு கூட்டத்தில் பேசினார். அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி கூட்டம்.

அவருடைய பேச்சின் தலைப்பு. ‘மனிதனுக்கு மரணமில்லை’ .

Comments

புதிது பேஸ்புக் பக்கம்