போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு

🕔 August 30, 2019

– மப்றூக் –

ரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில் இடையூறுகள் ஏற்படுவதாகவும், இலங்கை போக்குவரத்து சபை, நஷ்டத்தை எதிர்கொள்வதாகவும் இதன்போது அந்த சபையின் ஊழியர்கள் விசனம் தெரிவித்தனர்.

போலியான ஆவணங்களைக் காண்பித்து, மோசடியான முறையில் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு பஸ் ஒன்று தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவினுடைய உதவி செயலாற்று முகாமையாளர், அக்ரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடந்த 16ஆம் திகதி முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்திருந்தார்.

ஆயினும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக, நேற்றிரவு அக்கரைப்பற்று பேரூந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காகத் தரித்து நின்ற, போலியான ஆவணங்களுடன் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் – சர்ச்சைக்குரிய தனியார் சொகுசு பஸ் ஒன்றினை, இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மறித்து வைத்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார், குறித்த தனியார் சொகுசு பஸ்ஸின் ஆவணங்களைப் பரிசீலித்தமையினை  அடுத்து, அந்த பஸ் வண்டியினையும் அதன் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சட்ட ரீதியான ஆவணங்கள் இன்றி – சில சொகுசு பஸ் வண்டிகள், அம்பாறை மாவட்டத்திலிருந்து பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாக, நீண்ட காலமாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சட்ட ரீதியான வழிப்பயண அனுமதியின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள், பொலிஸாரிடமிருந்தும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, ஆபத்தான காட்டு வழிப் பாதைகளினூடாக பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிக்கின்றமை குறித்தும் முறைப்பாடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வேண்டிக் கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்