‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

🕔 August 23, 2019

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதி கஞ்சிபான இம்ரான் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கஞ்சா கடத்தியமை ஆகிய 02 குற்றங்களுக்காக தலா 03 ஆண்டுகள் வீதம் 06 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மாளிகாவத்தை பகுதியில் 5.3 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டில், கஞ்சிபான இம்ரான் மீது 2018 செப்டம்பர் 13 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரான், நாடு கடத்தப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments