பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 August 21, 2019

பாறுக் ஷிஹான்

யங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில்  நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு  மாவட்ட நீதிபதியும்  கல்முனை  நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக்  முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும்  பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ்   கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் கைதாகினர். இவர்கள்  இரு மாதங்களுக்கும் மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள்  தொடர்பான விசாரணைகள் இன்று   மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது  சந்தேகநபர்கள்  14 பேருக்கும் விளக்கமறியல் மீண்டும்  நீடிக்கப்பட்டு  இவ்வழக்கின் அடுத்த தவணையை  எதிர்வரும்  செப்ரம்பர்  மாதம் 04 திகதி  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

Comments