எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம்

🕔 August 20, 2019

ந்த அரசாங்கம், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்து சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி – கடுகஸ்தோட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றிலேயே இவ்வாறு அவர் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் ஹக்கீம்;

“பாததும்பர கருத்திட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதும் ஹரிஸ்பத்துவ, பாததும்பர, யடிநுவர மற்றும் கலகெதர முதலான தொகுதிகளில் வசிக்கும் சுமார் 04 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க முடியும். இதற்காக சீன எக்ஸிம் வங்கி 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் குண்டசாலை – ஹாரகம நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவிருப்பதுடன் சீன எக்ஸிம் வங்கி இதற்கான நிதியை இலகு கடன் திட்டத்துக்கு அமைவாகவே வழங்க முன்வந்துள்ளது. இதற்காக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர், சீன முதலீட்டு வங்கியின் தலைவர் ஆகியோருக்கும் சீன அரங்கத்துக்கும் நன்றியறிதலைப் பதிவு செய்கின்றேன்.

இது தவிர, தற்போது வடமேல் மாகாணத்தின் சனத்தொகையின் அரைவாசிக்கும் அதிகமான மக்களும் மத்திய மாகாணம், வட மாகாணம் முதலான பல்வேறு மாகாணங்களிலும் லட்சக்கணக்கான மக்களும் நன்மையடைய உள்ளனர். முதன் முறையாக கடல் நீரிலிருந்து குடிநீரை உற்பத்திசெய்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாரிய கடன் வசதிகளைப் பெற்று இத்துறையில் முதலீடுகளை செய்துவருகின்ற போதிலும் இவற்றின் சுமைகளை மக்களுக்கு சுமத்தாது பல வருடங்களாக நீர் வழங்கல் கட்டணத்தை அதிகரிக்காது சேவை செய்து வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்” என்றார்.

இங்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடகவியளாலர்களால் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர்; “கட்சிகளில் போட்டியிடும் அபேட்சகர்கள் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொரு கட்சியினதும் கொள்கை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் அவற்றை ஆராய்ந்த பின்னரே எமது கட்சி முடிவுகளை எடுக்கும்” எனவும் தெரிவித்தார்.

(முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்