வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

🕔 August 15, 2019

டக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் றிஷாட் மேலும் கூறுகையில்;

“வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்திகள் பணிகள் இடம்பெற்றுள்ளன.

அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக  அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார்.

வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments