என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம்

🕔 August 9, 2019

– பைஷல் இஸ்மாயில் –

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண ஆணையாளர் ஈடுபடுவதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதர் தெரித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் டொக்டர் திருமதி ஆர். ஸ்ரீதர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட  17 பேர் கையொப்பமிட்டு 2019.08.02 ஆம் திகதி என குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்று மூன்று தினங்களே ஆகின்றன.

இதுதொடர்பில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். செயலாளரின் ஆலோசனைகளுக்கமைவாகவே முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்நிலையில், மருத்துவப் பொறுப்பதிகாரி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல், அவர் தொடர்பில் புகார் தெரிவித்து கடிதம் எழுதியவர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடவடிக்கையில் நான் ஈடுபடுவதாக, என் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்திய செய்தியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

நான் யாருக்கும் அவ்வாறான இடமாற்றங்களை வழங்கவில்லை. அவ்வாறு யாருக்காவது இடமாற்றம் வழங்கியிருந்தால் அதன் விபரங்களை அந்த ஊடக நிறுவனம் கேட்டறிந்து வெளியிட்டிருக்கவேண்டும்.

குறித்த வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரிக்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக் கடிதம் என்னிடம் கிடைக்கப்பெற்று மூன்று தினங்களுக்குள், அதற்கான முடிவு எடுக்கப்படவேண்டும் என விரும்புவது – பிழையான எண்ணப்பாடாகும்.

அரச நிறுவனங்களுக்கென்று ஒரு கட்டமைப்புள்ளது. அதன் பிரகாரமே எல்லா நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதற்கு மாற்றமாக எவ்வித நடவடிக்கைளும் இடம்பெறாது என்பதை நான் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஊடகங்கள் யாவும் மிக நேர்மையாகவும், தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை அறிந்துகொண்டு உண்மைக்கு உண்மையான செய்திகளை வெளியீடு செய்கின்ற செயற்பாட்டில் ஈடுபடவேண்டும்.

யாருக்கு எதிராக ஒரு செய்தி வருகின்றதோ குறித்த நபர்களை தொர்புகொண்டு அந்த விடயம் பற்றி கேட்டறிந்து கொள்ளவேண்டும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

ஆசிரியர் குறிப்பு: வைத்தியப் பொறுப்பாதிகாரிக்கு எதிராக முறையிட்டவர்களை இடமாற்றம் செய்வதற்கு கிழக்கு மாகாண ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இடமாற்றம் செய்ததாகக் குறிப்பிடவில்லை.

அதுவும், முறைப்பாடு செய்த பணியாளர்கள்தான், அந்த புகாரையும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

வைத்தியப் பொறுப்பாதிகாரிக்கு எதிராக முறையிட்டவர்களை இடமாற்றம் செய்வதற்கு கிழக்கு மாகாண ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இடமாற்றம் செய்ததாகக் குறிப்பிடவில்லை.

அதுவும், முறைப்பாடு செய்த பணியாளர்கள்தான், அந்த புகாரையும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

Comments