ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

🕔 August 9, 2019

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் எந்தவிதமான இறுதித் தீர்மானத்திற்கும் வரவில்லை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்துகின்ற அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது என்ற அடிப்படையில்தான் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் தமது சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

‘ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஒரு தீர்மானத்தில் இருக்கின்றது.

அது வேட்பாளரை முன்னிறுத்திய தீர்மானம் அல்ல.

இலங்கையின் சிறுபான்மைச் சமூகத்தில் ஒன்றான முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற இன நெருக்கடிகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை எட்டக்கூடிய தீர்வுகளை முன்வைக்கக்கூடிய கட்சிக்கும் அதன் வேட்பாளருக்குமே, எமது கட்சியின் ஆதரவை வழங்குவது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

வெறும் அரசியல் பதவிகளைக் கருத்திற்கொண்டோ, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவோ ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக் கட்சி தோற்றுவிக்கப்பட்டவில்லை.

முஸ்லிம் மக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் செய்வதற்கான – அதிகாரமுடைய நமது அரசியல் களமும் இல்லை, நமது அரசியல் பிரதிநிதிகளும் அதற்குத் தயாராக இல்லை. இதனால், மக்கள் நலன் சார்ந்த அரசியல் நகர்வுகள் – நமது சமூகத்திற்குள் தூரமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையை மாற்றியமைத்து மக்கள் நலன் சார்ந்த அரசியல் போக்குக்கு நமது மக்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புடையவர்களாக நமது கட்சியினர் இருக்க வேண்டும் என்கின்ற தூய நோக்கோடு, எமது பயணம் தொடங்கப்பட்டிக்கின்றது.

அதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை இணங்காண்பதற்கும் அவற்றினை படிப்படியாகத் தீர்ப்பதற்கான திட்டங்களையும், எந்தக் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கின்றதோ, அந்தக் கட்சியையும் அதன் வேட்பாளரையும் ஆதரித்துக் கொள்வதற்கு என்றும் நாம் தயாராக இருக்கின்றோம்.

அல்லது நாம் அடையாளம் கண்டிருக்கின்ற பிரச்சினைகளான கரையோர மாவட்டம், கிழக்கில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாண அமைப்பு முறைமை மற்றும் தேவையான பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி அலகுகள், மற்றும் காணி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை முன்னிறுத்தும் கட்சிகளோடு நாம் உரையாடவுள்ளோம். அதன்போது எமது கோரிக்கைகளுக்கு நெருக்கமாக வரக்கூடிய கட்சியையும் அதன் வேட்பாளரையும் ஆதரித்துக் கொள்வதென்றே தீர்மானித்துள்ளோம்.

இந்த வகையில் சில அரசியல் கட்சிகள் எம்மைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீகளை வழங்கியிருக்கிறன. அதன் ஒரு கட்டமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான அண்மைய சந்திப்பு இடம்பெற்றது. அது மீண்டும் ஒரு சந்திப்புக்கான நேர ஒதுக்கீட்டில் இருக்கிறது. அந்த சந்திப்பில்தான் எமது தேவைகள் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதேபோன்று இன்னும் பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, எந்தத் தரப்புக்கும் இதுவரை, தனது முழு ஆதரவை தெரிவித்து உடன்பட்டுக் கொள்ளவில்லை என்பதே தற்போதைய நிலைப்பாடாகும்.

Comments