அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

🕔 August 8, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண ஆணையாளர் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக எழுதி, கடந்த 02ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றும் 24 பேரில் 17 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவப் பொறுப்பதிகாரி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல், அவர் தொடர்பில் புகார் தெரிவித்து கடிதம் எழுதிய ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடவடிக்கையில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி ஆர். ஸ்ரீதர் ஈடுபடுவதாக, அந்த வைத்தியசாலை ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி தள ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுபவர், அங்குள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் மிக மோசமாக, கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும், அரச விடுதியை கடந்த ஆறுமாதங்களாக எந்தவித முறையான அனுமதிகளும் இன்றி பயன்படுத்தியதாகவும் குறித்த குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அங்கு கடமையாற்றும் காவலாளிகளை தன தனிப்பட்ட தேவைகளுக்காக மருத்துவப் பொறுப்பாளர் பயன்படுத்துவதாகவும் அதனூடாக பல்வேறுபட்ட சிக்கல்நிலை ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய முறப்பாடு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளாது, முறைப்பாடு செய்த ஊழியர்களை பழிவாங்க முயற்சிப்பது அநீதியான செயற்பாடு எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவப் பொறுப்பதிகாரியை விசாரணை செய்யும் வரை, பிறிதொரு இடத்துக்கு இணைப்புச் செய்யாது, அதே இடத்தில் தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பது, சுயாதீன விசாரணைக்கு இடையூராக அமையும் என்பதனையும் மாகாண ஆணையாளர் கவனத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்டாளைச்சுனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவப் பொறுப்பதிகாரியும், கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

 • முறையான அனுமதியின்றி வைத்தியசாலை விடுதியை கடந்த ஜனவரியில் இருந்து தற்போதுவரை பாவித்து வருகின்றார். (மின்சாரம், நீர்க்கட்டணங்கள் செலுத்த அரச பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது)
 • விடுமுறையில் செல்லும்போது அதற்கான பதில் பொறுப்பதிகாரியை நியமிக்காமல் செல்லுதல். (அதனால் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்)
 • பெரும்பாலான நாட்களில் தாமதமாகவே கடமைக்கு வருகின்றார். அத்துடன் விரைவாக ஓய்வறைக்குச் சென்று கடமை நேரத்தை உறக்கத்தில் கழிக்கின்றார்.
 • வைத்தியசாலையின் பெயரில் நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஊழியர்களிடமும் நிறுவனங்களிமும் பணம் அறவிடுகிறார். அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்துக்கு கணக்கறிக்கை சமர்ப்பிப்பதில்லை. (உலக யூனானி தினம், இப்தார் நிகழ்வு)
 • தொற்றா நோய் கிளினிக் தினங்களில் நோயாளர்களுக்கு இலைக்கஞ்சி வழங்குவதற்கு மாகாண ஆணையாளர் அனுமதி வழங்கியும், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வழங்காமை. (அதற்கு பொறுப்பான ஊழியர்களை காசு கையாடல் தொடர்பில் வீண் பழி சுமத்தியமை)
 • தனிப்பட்ட பிரச்சினைகளை உத்தியோகத்தர்கள், ஊழியர்களிடம் காண்பிப்பதுடன், இங்குள்ளவர்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துதல். தூஷண வார்த்தைகளால் ஏசுதல்
 • உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு வருகின்ற கடிதங்கள் உரிய காலத்திற்கு கிடைக்காமல் கிடப்பில் போடுதல்.
 • பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளை தனது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துதல்.
 • வைத்தியசாலை அபிவிருத்தி, அதன் வளர்ச்சிக்கு தேவையான விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை.
 • அரச சொத்துக்களை அவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக முழுமையாக பாவித்தல். (தொலைபேசி, வைத்தியர் விடுதி, சிறு காசு, காகிதாதி பொருட்கள் உள்ளிட்டவை)
 • நோயாளிகள், ஊழியர்களுக்கு வருகின்ற சாப்பாடு மற்றும் சமயலறையிலுள்ள பொருட்களை சொந்தத் தேவைகளுக்காக (வீடு செல்லாமல் விடுதியில் தங்கியிருந்து) பயன்படுத்தல்.
 • வைத்தியர் ஓய்வு அறைகளை முழுமையாக பயன்படுத்துகின்றார். இதனால் கடமையிலுள்ள ஆண், பெண் வைத்தியர்கள் அனைவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
 • நோயாளர் விடுதி, நிருவாக கட்டிடத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தித் தருமாறு விடுதிப் பொறுப்பு வைத்தியரினால் எழுத்துமூலம் கோரப்பட்டும்,அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
 • ஊழியர்களின் ஆவணங்களில் கையொப்பமிடுவதனை வேண்டுமென்றே தாமதப்படுத்துதல்.
 • வைத்தியர்களுக்கான ஓய்வறையில் தங்கிக் கொண்டு நோயாளர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்.
 • மாதாந்தம் கிடைக்கப்பெறுகின்ற 5000.00 ரூபா சிறுகாசு நிலுவையில் இல்லாத போதும், அவருக்குத் தேவையான பொருட்களை வைத்தியசாலை செலவில் அன்றாடம் கொள்வனவு செய்கிறார்.
 • தனக்கு விருப்பமில்லாதவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க மறுப்பது, கிடைக்கப்பெற்ற அனுமதியை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது.

இவை உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகளும், மேற்படி வைத்திய பொறுப்பதிகாரிக்கு எதிராக, அங்குள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் பணியாற்றும் பெரும்பான்மையான உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் அங்குள்ள வைத்தியப் பொறுப்பதிகாரிக்கு எதிராக தெரிவித்துள்ள புகார் தொடர்பில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் நீதியானதும், பக்கச்சார்பற்றதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அங்குள்ள ஊரியர்களின் எதிர்பார்ப்பாகும்.

இது தொடர்பில், ஊடகங்களும் அவதானம் செலுத்திக் கொண்டிருக்கும் என்பதையும், இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

Comments