ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

🕔 August 3, 2019

மூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் தமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; அமைச்சர் மேலும் கூறியதாவது:

“நமது சமூகத்தை எப்படி நசுக்குவதென்றும் சமூகத்தலைமைகளின் குரல்வளையை எவ்வாறு நெருக்குவதென்றும் நீண்டகாலமாக காத்திருந்த இனவாத கழுகுக் கூட்டமொன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சந்தர்ப்பமாகக் கொண்டு, எம்மை பழிவாங்க நினைத்தது.

மிகவும் அசிங்கமாகவும் அருவருக்கத்தக்க நிலையிலும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் தமது குரோத செயற்பாடுகளை அரங்கேற்றினர். ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டுமென்ற நோக்கிலும் வங்குரோத்து அரசியலில் இருந்து மீளெழும் நோக்கிலும் இந்த திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த சதிகார சக்திகள் மேற்கொண்டன.

முஸ்லிம் சமூகம் எந்தக் காலத்திலும் ஆயுதக்கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. கடந்த காலங்களில் நமது சமூகம் இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டிபும் இருக்கின்றது. இருந்த போதும் சமூகத்திலிருந்து பிறழ்ந்த, திசை மாறிப்போன கயவர்களின் செயலால் நாம் மாத்திரமன்றி சகோதர சமூகங்களும் அதிர்ச்சியடைந்தன.

உளவுப் பிரிவும் உயர்மட்டமும் முதலில் இதை நம்ப மறுத்த போதும், படிப்படியாக கசிந்து வந்த உண்மைச் செய்திகள், இந்தச் சமூகத்திலிந்த கயவர்கள்தான் இவ்வாறான கொடூரச் செயலை செய்திருக்கின்றார்களென நிரூபணமாக்கிறது. இதனால் முஸ்லிம் சமூகம் பேரதிர்ச்சியும் பெரு வேதனையும் அடைந்தது; நிலைகுலைந்தது.

இனவாதச் சதிகாரர்கள், சம்பவம் நடந்து 24 மணிநேரத்துக்குள்ளே சமூகத்தை மாத்திரமன்றி என்னையும் ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி போன்றவர்களையும் இதனுடன் சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். கண்டியில் உண்ணாவிரதம் இருந்து பேரணி நடத்தி எங்களை பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, அதன் மூலம் நாட்டிலே அமளியை தோற்றுவித்து, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்க்க முனைந்தனர்.

இதனாலேயே கட்சி, கொள்கை, பிரதேச வேறுபாடுகளை களைந்து ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்தனர். இந்த ஒற்றுமையானது இனவாதக் கயவர்களுக்கும் வங்குரோத்து அரசியல் நடத்துபவர்களுக்கும் பேரிடியாகவும் பெருத்த எமாற்றமாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை ஒடுக்குவதற்கும் திட்டமிட்டு அழிப்பதற்கும் மேற்கொண்ட சதிகாரர்களுக்கு இந்த ஒற்றுமையான செயற்பாடு முகத்தில் கரியைப் பூசியது.

இவ்வாறு ஏற்பட்ட ஒற்றுமையானது தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனைகளாகும்.

நமது மார்க்கத்தைப்பற்றிய உண்மைத் தன்மையையும் தெளிவையும் வெளியுலகத்திற்கு கொண்டு செல்வதில் நாம் அலட்சியப் போக்குடன் இருந்து விட்டோம். உண்மையில் நாம் தவறிழைத்து விட்டோம் என்றே எனக்குப்படுகின்றது. இதனால்தான் இஸ்லாம் பற்றிய பிழையான பார்வையில் பிற சமூகத்தவர்கள் இருக்கின்றனர்.

புனித குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு இனவாத மதகுருமார் இன்று துணிந்து விட்டனர். இல்லாத பொல்லாத அர்த்தங்களை புனித ஆனுக்கு கொடுக்கின்றனர். நமது கலாசாரம் இஸ்லாமிய வாழ்வு முறைபற்றி பிழையான எண்ணக்கருத்துக்கள் பிற சமூகத்தவர் மத்தியிலே விரவிவிட்டன. சில வேறுபாடுகளை வைத்து தப்லீக், தௌஹீத், தரீக்கா என்று நாம் பிரிந்து செயற்படுவது அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. இந்த சதிகாரர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமெனின் நாம் ஒற்றுமைப்பட வேண்டியதே காலத்தின் தேவையாக உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது கதையாடல்கள் இடம்பெறுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் நம்மவர்கள் அது தொடர்பான கருத்தாடல்களை ஆரம்பித்துள்ளனர். நாம் எதற்கும் அவசரப்பட முடியாது. எழுந்தமானமான முடிவுகள் நமது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக அமையப் போவதுமில்லை. புத்திசாதுரியமாக இந்த விடயத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, எவ்வாறு ஒன்றுபட்டு இருந்தோமோ அவ்வாறே எதிர்கால அரசியல் தீர்மானங்களிலும் ஒன்று பட்டு சமூகம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் – மக்களுக்கு சரியான தெளிவுகளை வழங்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்” என்றார்.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமிர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றினர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்