டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

🕔 August 1, 2019

– முஜீப் இப்றாஹிம் –

குருணாகல் பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஜயலத் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க ஆகியோரை அங்கிருந்து இடமாற்றுவதற்கான அங்கீகாரத்தினை பொலிஸ் ஆணைக்குழு இன்று வழங்கியுள்ளது.

வைத்தியர் ஷாபி தொடர்பான கருத்தடை குற்றச்சாட்டுகளை எந்தவிதமான இடையூறுகளும் இன்றி தொடர்ந்தும் மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இனருக்கு வழிசமைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வைத்தியர் ஷாபி தொடர்பாக போலிக் குற்றச்சாட்டுகளை புனைந்தார்கள் என்ற அடிப்படையில் இந்த நாடகத்தின் பிரதான பாத்திரங்கள் பல விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னை காப்பாற்றுமாறு பிரதமரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார்.

இந்த துருப்பிடித்த போலிக்கயிறுகளை விழுங்கிக்கொண்டு வதந்திகளை பரப்பிக்கொண்டிருக்கும் தெரண, ஹிரு தொலைக்காட்சிகள் விரைவில் இடம்பெறப்போகும் கைதுகளை ஒளிபரப்ப தயாராக இருக்கவேண்டுமெனவும் அந்த நேர்காணலில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சொன்னதும் ஞாபகம் வருகிறது.

“சுபஹ் தொழுதுவிட்டு வெளியே போகிறவன் இறைவனின் கொடியோடு போகிறான்”

வைத்தியர் ஷாபி கைதான அன்றும் சுபஹுத்தொழுகையின் பின்னர் தமது பணிக்கு செல்ல ஆயத்தமான அந்த வைத்திய தம்பதியினர் தமக்கு எதிராக பின்னப்படும் சதிவலையினை பற்றி தங்கள் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்து ஆலோசித்தார்கள்.

அவர்கள் மீது ஒரு கடும் சோதனையினை இறைவன் அன்று நாடியிருந்தான். ஆனால் அதிலும் பல நலவுகள் இருந்தன.

அந்த நலவுகள் அவர்களுக்கானதும், இலங்கை முஸ்லிம்களுக்கானதும் என்பதை தற்போது நகரும் நாட்கள் கட்டியங்கூறிச் செல்கின்றன.

பள்ளியை உடைத்து விட்டு, குர் ஆனை எரித்துவிட்டு “கோ ஓகொல்லு தெய்யோ?” ( உங்களது இறைவன் எங்கே?) என்று கேட்டார்கள்.

நல்லவர்கள் பலர் அநீதியாக கைதானார்கள்.
அப்பாவிகள் புனித நோன்பு மாதத்தில் கொல்லப்பட்டார்கள்.

ஈமான் பலவீனமானவர்கள் இறைவனது செயற்பாட்டின் மீது அதிருப்தி கொண்டார்கள்.

இறைவன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டா இருக்கிறான்? என மனதாலும் நாவாலும் சிலர் மொழிந்தார்கள்!

இறைவன் இதற்கெல்லாம் உடனே ரியக்ட் பண்ணி வானத்திலிருந்து நெருப்பு கொள்ளியை வீசினாலோ, பள்ளியை உடைப்பவனின் கைகளை முடக்கினாலோ, எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கூட சிலர் நினைக்கலாம்!

உலகத்தில் நடக்கும் இது போன்ற இவற்றை விட பல மடங்கு மோசமான கொடூரங்களுக்கு எதிராக இறைவன் உடனடியாக ரியக்ட் பண்ணுவதாக தெரியவில்லை.

அது அவனுடைய ‘ஸிபத்து’களும் (பண்புகள்) அல்ல.

இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் மனிதன் தனது ஈமானை காத்து போராடி இவ்வுலக வாழ்வை வெல்ல வேண்டும் என்றே இறைவன் எதிர்பார்க்கிறான்.

இல்லாவிட்டால் எதற்காக அவன் சொர்க்கத்தையும், நரகத்தையும் படைத்தான்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்