அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை

🕔 July 31, 2019

– மரைக்கார் –

முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவியை ஏற்றமை, துறந்தமை பின்னர் ஏற்றமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன.

முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் பதவிகளை, அந்தக் கட்சிகள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவுக்கான பரிசாகவே பார்க்க வேண்டும்.

தந்திரோபாயம்

முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் துறந்தமை என்பது, ஏப்ரல் 21ஆம் திகதிய தாக்குதலை வைத்து, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் எதிர்த்தரப்பின் நகர்வுகளுக்கு எதிரான, ஆளும் தரப்பின் தந்திர நடவடிக்கையாகும். தவிர, அந்த செயற்பாட்டுக்கு வேண்டு எந்தக் காரணங்களும் கிடையாது.

இப்போது எதிர்த்தரப்பினரின் அந்த நகர்வு தோற்கடிக்கப்பட்டுள்ளமை போல் தெரிவதால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகையினர் தமது பதவிகளை மீளவும் பொறுப்பேற்றுள்ளனர்.

மேட்டர் இவ்வளவுதான். இதனை விட்டு விட்டு, முஸ்லிம்கள் அமைச்சர் பதவிகளைத் துறந்தமையுடன் சமூக உணர்வு, நாட்டுப்பற்று போன்ற சமாச்சாரங்களையெல்லாம் இணைத்துப் பார்ப்பது, அதனால் ஏமாற்றமடைவவது, அதன் பின்னர் முஸ்லிம் அமைச்சர்களைத் திட்டித் தீர்ப்பது போன்றவற்றையெல்லாம், அரசியல் தந்திரோபாயம் பற்றிய போதிய அறிவின்மையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால், நம்மில் அதிகமானோர் – முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தமையானது, சமூக அக்கறையின் மேலீட்டினால் நடந்தது என நினைத்துக் கொண்டனர். அதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிரான இன்னல்கள் இன்னும் தீராத நிலையில், எப்படி நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை எடுப்பீர்கள் என்று சமூக ஊடகங்களில் கொதிக்கின்றனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் இத்தனை நாட்களும் பதவி துறந்தமையினால், அரசாங்கத்துக்க எந்தவித தீமைகளும் ஏற்படவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால், நிறைய நன்மைகள்தான் நடந்துள்ளன.

செய்திருக்க வேண்டியது

மறுபுறம், முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் தீர்க்கவில்லை என்கிற கோபம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தால், அவர்கள் எதிரணி ஆசனங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அதுதான் நியாயமான செயற்பாடாகவும் இருந்திருக்கும்.

அப்படிச் செய்வதால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்றால் நமக்கென்ன? முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அடக்கத் தவறினால், ஆட்சியைக் கூட கவிழ்க்கத் தயங்க மாட்டோம் என்கிற சேதியை அதனூடாக, அரசாங்கத்துக்க தெரிவித்திருக்க முடியும்.

ஆகவே, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறந்தமை, பிறகு ஏற்றமை தொடர்பில் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. அது அரசியல் தந்திரோபாயம் என்பதால், நாமும் அந்த செயற்பாடுகளை அறிவு சார்ந்தே பார்க்க வேண்டும்.

உயர்பீடமும், ஹக்கீமின் அலட்சியம்

இந்த விவகாரத்துடன் இன்னொரு மேட்டரையும் சேர்த்துப் பேச வேண்டியுள்ளது.

அமைச்சர் பதவிகளைத் துறந்தவர்களில் நால்வர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள். மூவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்.

மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீனும் அந்தக் கட்சியியைச் சேர்ந்த அமீரலி மற்றும் அப்துல்லா மஹ்றூப் ஆகியோரும், அவர்கள் ராஜிநாமா செய்த பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவ்வாறு பொறுப்பெடுப்பதற்கு முதல் நாள் கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீடத்தினர், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தனர்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் சில வாரங்களுக்கு முன்னர் கூடியபோது, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்க கூடாது என்று தீர்மானம் எடுத்திருந்தது.

இருந்த போதும், இந்தத் தீர்மானத்தை மீறியே மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அமைச்சர் பதவியை பொறுப்பெடுத்திருக்கிறார்.

இந்த ஆட்சியில் அமைச்சர் பதவிகளை எடுப்பதா? அப்படி எடுப்பதென்றால் எத்தனை பதவிகளை எடுப்பது? என்னென்ன பதவிகளைக் கேட்பது? அவற்றினை யாருக்கெல்லாம் கொடுப்பது என்றெல்லாம், தனது கட்சியின் உயர் பீடத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அனுமதி கேட்டுத்தான் நடந்தாரா என்று, இந்த இடத்தில் உங்களில் யாரேனும் முணுமுணுக்கவும் கூடும்.

அப்படிப் பார்த்தால், உயர்பீடத்தின் அனுமதி இல்லாமல் பெற்ற பதவியைத்தான் மு.கா. தலைவர் ராஜிநாமா செய்தார். எனவே, அதனை மீளவும் பெற்றுக் கொள்வதற்கு ஏன் உயர் பீடத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற ‘லொஜிக்’ ஆன கேள்வியும் இங்கு உள்ளது.

அப்படியெல்லாம் நினைத்து விடாதீர்கள்

பிறகு இன்னொரு விடயம்.

மு.காங்கிரஸின் நாடளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர், தாம் ராஜிநாமா செய்த அமைச்சர் பதவிகளை துச்சமென நினைத்து, சமூகத்துக்காக மீண்டும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என நினைத்து, யாரும் மெய் சிலிர்த்து விடாதீர்கள்.

மெய் சிலிர்த்து…. மெய் சிலிர்த்து விளையாடுவதற்கு, வேறு விடயங்கள் இருக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்