உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார்

🕔 July 31, 2019

– அஸ்ரப் ஏ சமத் –

லக சமாதான இஸ்லாமிய மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கு எதிர்பாராதவிதமாக உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

உலக சமாதான இஸ்லாமிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில், உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், அவருடன் வருகை தந்த பிரநிதிகள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் துாதுவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பௌத்தபீடங்களின் மூன்று மகாநாயக்க தேரர்கள், கிறிஸ்தவ மற்றும் இந்து மத குருக்களுடன், ஜம்மியத்துல் உலமா தலைவர்  றிஸ்வி முப்தி ஆகியோரே, மதத்தலைவர்கள் எனும் அடிப்படையில் மேற்படி மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் சிஹல உறுமய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் உரை நிகழ்த்துவதாக குறிப்பிடப்பட்டிருக்காத போதிலும், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார்.

முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு மற்றும் சஊதி அரேபியாவினால் அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி 500 வீடுகள் போன்றவற்றினை கிடைக்காமல் செய்வதில் ஓமல்பே தேரர் முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஆங்கிலத்தில் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர்; 
குர்ஆன் வசனங்கள் சிலவற்றினை ஆங்கிலத்தில் அங்கு வாசித்துக்காட்டினார்.

அதாவது, சூறா அல் பகாராவில் ‘இறுதிவரை யுத்தம் செய்யுங்கள், அல்லது அவா்களை கொலை செய்யுங்கள்’ எனும் வசனங்களைச் சுட்டிக்காட்டி, இஸ்லாத்தை ஏற்கும் மட்டும் அவா்களை கொலை செய்யுங்கள் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், இது பற்றி அவருக்கு சரியான  விளக்கம் தேவை என்றும், இந்த நாட்டில் வாழும் பௌத்தா்களோடு இந்து, கிறிஸ்தவர்கள் சமாதானமாக வாழ்வதாகவும், ஆனால் முஸ்லிம்கள் உடை, உணவு, கல்வி, கலாச்சாரத்தில் தனித்து செயற்படுவதாகவும் கூறினார்.

“கடந்த 10,15 வருடங்களாக தனித்து, பிரிந்து செயற்படும் முஸ்லிம்கள் எதிா்காலத்தில் இந்த நாட்டினையும் பிரித்து விடுவாா்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

தேரரின் உரை, அங்கிருந்த முஸ்லிம்களை கடுமையாகப் புண்படுத்தியது.

இதன் பின்னர் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி; “சோபித தேரருக்கு குர்ஆன் பற்றி தெளிவுபெற வேண்டுமென்றால் எங்களை சந்தித்து தெளிவுபெற்றுக் கொள்ள முடியும். புனித குர்ஆன் உலக சமாதானத்திற்கும் நல்வாழ்வுக்கும் உரியது. உங்கள் மாா்க்கம் உங்களுக்கு, எமது மார்கம் எங்களுக்கு” என்று பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்