சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’

🕔 July 27, 2019

– மரைக்கார் –

முகத்தை மறைத்து ஆடை அணிவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ‘புர்கா’ அணிவதற்கும் இப்போது முடியாது.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டு வந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அரசாங்கமே முகத்தை மரைக்கும் ‘புர்கா’வுக்குத் தடை ஏற்படுத்தியிருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த விடயங்களாகும்.

இன்னொருபுறம் இஸ்லாத்தில் முகத்தை மறைத்து பெண்கள் ஆடை அணியத் தேவையில்லை என்கிற வாதங்களும் அதிகமாகவே உள்ளன.

எவ்வாறாயினும் நாட்டில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும்.

அதிலும் தற்போது அவசரகாலச் சட்டம் நாட்டில் இருப்பதால், சட்டத்தை மீறுகின்றவர்களை பாதுகாப்புத் தரப்பினர் இலகுவாகவே ‘உள்ளே’ தூக்கிப் போட முடியும்.

இவ்வாறான சூழ்நிலையில், ஆங்காங்கே முகத்தை மறைத்து ஆடையணிந்து செல்லும் முஸ்லிம் பெண்களை காணக் கூடியதாகவே உள்ளது.

அதுவும் மோட்டார் சைக்கிள்களில் கணவர்களுடன் முகத்தை மறைத்து ஆடை அணிந்து, பகிரங்கமாகவே இவர்களில் அதிகமானோர் பயணிப்பதைக் காண முடிகிறது.

பொலிஸார் அல்லது பாதுகாப்பு படையினர் இவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய முடியும். அவசரகாலச் சட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், அவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்களை ‘கூட்டில் ‘ அடைக்கவும் முடியும்.

அவ்வாறு நடந்தால், முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தார் இதனை சமூகப் பிரச்சினையாக்கி கூக்குரலிட்டு, சமூக ஊடகங்களில் நீதி வேண்டிப் போராடத் தொடங்குவார்கள்.

சட்டத்தை மதியாத இவ்வாறான பிடிவாதக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்தால், அதனை தனிப்பட்ட விவகாரமாகவே பார்க்க வேண்டும். ஆனால், பேரினவாதிகள் அதை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான விவகாரமாகவே காட்டத் தொடங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, தங்கள் திருமுகங்களை காட்ட மாட்டோம் என்கிற வைராக்கிய ‘தேவதைகள்’, தங்களின் வீடுகளில் இருப்பதே சாலச் சிறந்ததாகும். மேலும், அதுவே அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்கின்ற பெருங் கைங்கரியமாகவும் இருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்