ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம்

🕔 July 25, 2019

– அஹமட் –

காத்தான்குடி பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளைச் சேதப்படுத்தி, வலையில் அகப்பட்டிருந்த மீன்களை களவாடிச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆழ் கடலில் தரித்து நிற்கும் பெரிய படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தி, அந்த வலைகளில் சிக்கியிருக்கும் மீன்களை களவாடும் நடவடிக்கைகள் காத்தான்குடி கடற்பரப்பில் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு, கடலில் விரிக்கப்பட்டிருந்த பெரிய படகுகளின் வலைகளை, சிறிய மோட்டார் படகுகளில் வந்த சிலர் சேதப்படுத்தி, அவற்றிலிருந்த மீன்களைக் களவாடுகின்றமையினை, கடலில் தரித்து நின்ற பெரிய படகுகளில் இருந்தோர் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் இந்தத் களவு குறித்து கரையில் இருந்தவர்களுக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தகவின் வழிகாட்டுதலின் பேரில், பெருங்குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சார்ஜன் முஸ்தபா குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, களவாடப்பட்ட மீன்களை கொள்வனவு செய்து அவற்றினைக் கொண்டு சென்று விற்பனை செய்த இரு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை, ஒரு சிறிய படகு, அற்கான வெளி மோட்டார், களவாடப்பட்ட மீன்கள், அவற்றை கொண்டு செல்லப் பயன்படுத்திய வாகனம் மற்றும் எரிபொருள் கொள்கலன் ஆகியவற்றினையும் நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றினர்.

கைதான நபர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய, மீன்களை கடலில் வைத்து திருடிய சந்தேக நபர்களையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

களுவாஞ்சிக்குடி மற்றும் தேற்றா தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களையும், சான்றுப் பொருட்களையும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவற்கு காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்