த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

🕔 July 23, 2019

பாறுக் ஷிஹான்

னப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றியபோது;

“மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவுபெறுகின்றன.

இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும், இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு, போர் முடிந்து இராணுவத்தினர் வெளியேறுதல் போன்ற பல விடயங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்றேனும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

எம்மவரும் அதுபற்றி அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோ நிலையில் இல்லை. தமது தனிப்பட்ட நன்மைகளையே தமது பதவிகளை வைத்து பெற்றுவர எத்தனித்துள்ளார்கள்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் பல்வேறு ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு ஏமாற்றிவந்த நிலையில் அவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறி எம் மக்கள் நேர்கொண்ட போராட்டங்களும் அரசியல் செயற்பாடுகளுமே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இலங்கையில் என்ன நடைபெற்றுவருகின்றன, உண்மை நிலைமை என்ன, மக்களின் உணர்வுகள் என்ன என்பவை பற்றி எல்லாம் சர்வதேச சமூகத்துக்கு எட்டியிருக்கின்றது என்பதையே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அதாவது, போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்திருக்கின்றது.

சித்ரவதை, வலிந்து காணாமல் செய்யப்படுதல், போர்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை குறிப்பாக சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரணை செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் சபை, மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு தீர்மானத்தினைக் கொண்டுவந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட பல தரப்புக்களுக்கும் நாம் அனுப்பிய தீர்மானத்தில் இந்த விடயங்களையும் உள்ளடக்கியிருந்தோம். இவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர்களின் இந்தப் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம்.

அதேவேளை, இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றும் நாம் எமது தீர்மானத்தில் வலியுறுத்தி இருக்கின்றோம். அண்மையில் அமெரிக்க அரசாங்க அலுவலர்கள் என்னை சந்திக்க வந்தபோதும் நான் இதை வலியுறுத்தினேன். ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை இலங்கை நிறைவேற்றுவதற்கு தவறி இருக்கும் நிலையில் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனப் பல தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆகவே எமது இந்த வலியுறுத்தல்கள் நடைமுறைக்கு வரும் வகையில் இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமது அரசியல், ராஜதந்திர செயற்பாடுகளை வகுத்து செயற்படவேண்டும். அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்பதும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்படுத்துவதுமே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அத்துடன் கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணியிலும் கொள்கை ஒருமைப்பாடு கொண்ட அனைவரையும் எம்மோடு பயணிக்க அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன்” என்றார்.

Comments