காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 July 13, 2019

– பாறுக் ஷிஹான் –

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவன ஈர்ப்ப போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து தம்மை அரசாங்கம் ஏமாற்றிவருவதாகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

எமது உறவுகளை கடத்தியமை இனஅழிப்பாகும், சிங்கள பௌத்த நலன்களுக்குள் எமக்கான நீதி புதைக்கப்பட்டுவிட்டதா?, எமது உறவுகளே எமக்கு வேண்டும்,பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உரிமைக்குரல் அடக்கப்படுவது ஐ.நா.வே உனக்கு தெரியாதா?, சிங்கள ராணுவமே எங்களது உறவுகள் எங்கே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் ஒப்படைத்த போதிலும், இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்