தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை

🕔 July 12, 2019

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அந்த மாணவர்களில் ஒருவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை குறித்து பல்கலைக்கழக நிருவாகம் விசாரணை மேற்கொள்ளாமை தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு, ஊடகவியலாளர் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர்கள் குழுக்கள் அண்மையில், பல்கலைக்கழக வளாகத்தினுள் மோதலில் ஈடுபட்டிருந்ததோடு, அவர்களில் சிலர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மோதல் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகமொன்றின் ஆசிரியரை, மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியிருந்ததோடு, வெளியிட்ட செய்தியை அகற்றுமாறும் வற்புறுத்தியிருந்தார்.

இந்த அச்சுறுத்தல் குறித்தும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்ததோடு, பல்கலைக்கழக நிருவாகத்தினரின் கவனத்துக்கு, இந்த விவகாரங்களை ஊடகவியலாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.

இருந்த போதும், இதுவரையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராகவோ, ஊடகவியலாளரை அச்சுறுத்திய மாணவருக்கு எதிராகவோ பல்கலைக்கழக நிருவாகம் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என அறிய முடிகிறது.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் இவ்வாறு குழு மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிருவாகத்தினர் வகுப்புத்தடை விதித்ததோடு, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்கும் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில், அதே குற்றத்தைப் புரிந்த இஸ்லாமிய பீட மாணவர்களின் நடவடிக்கையினை பல்கலைக்கழக நிருவாகம் கண்டும் காணாமல் இருப்பது, பக்கச் சார்பான செயற்பாடாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுவிடம் ஊடகவியலாளர் குழுவொன்று முறையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்