விஷப் பாம்பு

🕔 July 9, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

  • சிங்கள அரசை அமைப்போம்
  • சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம்
  • நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம்
  • சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும்
  • சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை
  • இது சிங்களவர்களின் நாடு

கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எழுப்பிய கோசங்கள்தான் மேலே உள்ளவையாகும்.

“இது சிங்களவர்களின் நாடு” என்று கூறிய ஞானசார தேரர்; “இப்படிச் சொல்வதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்திருந்தார். அதாவது இந்தச் செய்தி முஸ்லிம்களுக்கானது என்பதைத்தான், இதன் மூலம் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்கள் கோபித்தாலும் கோபிக்காமல் விட்டாலும், ஞானசார தேரர் சொன்ன சேதி என்னவென்றால்; ‘தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நாடு சொந்தமில்லை’ என்பதே ஆகும்.

‘சிங்களம்’ என்கிற இந்தக் கோசம் காலாவதியானதாகும். மட்டுமன்றி அது தோல்வியடைந்த கோசமாகவும் உள்ளது. ஆயினும் நாட்டுக்கு இது ஆபத்தானதாகும்.

1956ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க, தனது அரசியலுக்காக தனிச் சிங்கள மொழிச் சட்டத்தைக் கையிலெடுத்தமையை மறந்து விட முடியாது. நாட்டில் நடந்த போராட்டங்களுக்கும், 30 வருட கால யுத்தத்துக்கும் பண்டாரநாயக்க அமுலாக்கிய தனிச் சிங்களச் சட்டமும் முக்கிய காரணமாக அமைந்தது.

1956ஆம் ஆண்டு ஜுன் மாதம் 05ஆம் திகதி அப்போதைய பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான நாடாளுமன்றத்தில், சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்டாநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமூலத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியும் அப்போது ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இருந்தபோதும் இதற்கு அப்போது கிளம்பிய எதிர்ப்பின் காரமணாக, 1958ஆம் ஆண்டு ‘சிங்களம் மட்டும்’ சட்டம் திருத்தியமைக்கப்பட்டு, தமிழுக்கும் இடம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் ‘தனிச் சிங்களம்’ என்கிற கோசம் தோல்வியடைந்தது. தனிச் சிங்களம் என்கிற கோசம் இலங்கைக்கு ஒத்து வராது என்பது நிரூபணமானது. அவ்வாறானதொரு ‘சிங்களம்’ என்கிற கோசத்தைத்தான் ஞானசார தேரர் உள்ளிட்டோர் இப்போது கையில் எடுத்திருக்கின்றனர்.

இந்தக் கோசம் இப்போதைக்கு முஸ்லிம்களை இலக்கு வைத்தது போல் தெரிந்தாலும், தமிழர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு இது ஆபத்தானதாகும்.

கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுபலசேனாவின் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கோசங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அநேகமான குற்றச்சாட்டுகள்; ’08 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு டொக்டர் ஷாபி, குழந்தைப் பேறின்னையை ஏற்படுத்தி விட்டார்’ என்பது போன்றவையாகும்.

“நாட்டில் 40 வகையான மொழிபெயர்ப்புகளுடன் குரான் உள்ளது. இந்த வருடம் இதுவரையிலான காலப் பகுதியில் மட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் 08 ஆயிரம் பேர் வரை, உலகில் கொல்லப்பட்டுள்ளனர்” என்பவை, தனது உரையில் ஞானசார தேரர் ஏகத்துக்கு எடுத்து விட்ட கட்டுக் கதைகளாகும்.

முஸ்லிம்களை ‘ஒரு வழி’ பண்ணி விட வேண்டும் என்பதே ஞானசார தேரர் போன்றோரின் எண்ணமாகும். அதற்காகவே, ‘சிங்களம்’ என்கிற கோசத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஞானசார தேரர் என்கிற நபர், அரசியல் தேவைகளுக்காக களமிறக்கப்பட்டவர் என்பதை நாம் அறிவோம். ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவையாகும். ஆனாலும், கட்சி பேதங்களின்றி அரசியல்வாதிகள் பலரும் அவரைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறிய ஒரு விடயம் மறக்க முடியாதது. “மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால், ஞானசார தேரரை நாய்க் கூட்டில் அடைப்போம்” என்று, அப்போது சந்திரிக்கா தெரிவித்திருந்தார். ஞானசார தேரர் முன்னெடுத்த இன ஒடுக்கு முறையினால் அப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிம் மக்களின் வாக்குகளை கவர்வதற்காகவே, சந்திரிக்கா அவ்வாறு கூறியிருந்தார்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரர் வெளிப்படுத்திய அட்டகாசங்களை விடவும் அதிகமானவற்றினை, தற்போதைய ஆட்சியில்தான் அவர் செய்து முடித்திருக்கிறார் என்பது கவலைக்குரியதாகும். அதிலும் பெருத்த ஏமாற்றம் என்னவென்றால்; யாரின் ஆட்சியில் ஞானசார தேரரை கூண்டில் அடைப்போம் என்றார்களோ, அந்த ஆட்சியாளர்தான் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி – திறந்து விட்டிருக்கிறார்.

நாட்டின் ஆட்சியை சிறுபான்மை இன மக்களே தீர்மானித்து வருகின்றார்கள் என்பது, பேசினவாத அரசியல்வாதிகளுக்கு ஜீரணிக்க முடியாத விடயமாகவே இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவைக் கட்டுவதற்கு மஹிந்த ராஜபக்க தனது ஆட்சிக் காலத்தில் முயற்சித்தார். சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடமேறும் கனவு அவருக்கு இருந்தது. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை. அவர் தோற்றுப் போனார்.

ஆயினும் மஹிந்த ராஜபக்ஷவிடம் அந்தக் கனவு இன்னுமிருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சி பீடம் ஏறலாம் என்கிற நம்பிக்கையை அவர் இன்னும் இழக்கவில்லை என்பதை அவரின் சொற்களும் செயல்களும் வெளிப்படுத்தி வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரியிடமும் இவ்வாறானதொரு நம்பிக்கை உள்ளதையும் கவனிக்க முடிகிறது. சிங்களப் பெரும்பான்மையின் மூலம் தனது அதிகாரத்தை தக்க வைக்கலாம் என்கிற எண்ணத்தில்தான், முஸ்லிம்களின் அதிருப்தியைக் கூட பொருட்படுத்தாமல், ஞானசார தேரரை அவர் சிறையிலிருந்து மீட்டுள்ளார்.

கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுபலசேனாவின் கூட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 10 ஆயிரம் பிக்குகளையும் 01 லட்சம் சிங்களவர்களையும் தமது கூட்டத்துக்குத் திரட்டப் போவதாக ஞனசார தேரர் அறிவித்திருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோரின் தொகையானது ஏற்பாட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது.

இந்த நிலைவரமானது, முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மூலம் ‘சிங்களத்தை’ மட்டும் நம்பி அரசியல் செய்ய நினைப்போருக்கு முக்கியமானதொரு சேதியினைத் தெரிவித்திருக்கிறது. அந்தச் செய்தி என்னவென்பதைப் புரிந்து கொள்வது, அவர்களின் அரசியலுக்கு நல்லதாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும்; ஒரே வகையான தீர்மானத்தை எடுக்கும் போது; அவர்களின் ஆதரவின்றி, சிங்களவர்களின் வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சி பீடம் ஏற முடியாது என்பதை, கடந்த தேர்தல் – அரசியல்வாதிகளுக்குக் கற்றுக்கொடுத்தது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர்களும், முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக இணைந்து எடுத்த முடிவினால்தான் மைத்திரி வெற்றி பெறவும், மஹிந்தவை தோற்கடிக்கவும் முடிந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களோ முஸ்லிம்களோ மைத்திரிக்கு ஆதரவளிக்காமல் விட்டிருந்தால், மஹிந்த அநேகமாக வென்றிருப்பார்.

இதனால்தான் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் தற்போது கடுமையான முரண்பாடுகள் வளர்த்து விடப்படுகின்றன. தமிழர்களும் முஸ்லிம்களும் இனி, எந்தவொரு விடயத்திலும் சேர்ந்து விடாதபடி, அவர்களுக்குள் குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் இருக்கும் அணியின் பக்கம் நாங்கள் போக மாட்டோம் என்று முஸ்லிம்கள் நினைக்குமளவு நிலைவரம் உருவாக்கப்பட்டு விட்டது. அதுபோலவே, முஸ்லிம்கள் இருக்கும் பக்கம் நாங்கள் இருக்க மாட்டோம் என்று தமிழர்கள் கூறுமளவு குரோதம் வளர்த்துள்ளது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இருந்து வந்த கசப்பும் கோபங்களும் உச்சமடைவதற்கு சிங்களப் பேரினவாதிகள் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்கிற தமிழர்களின் போராட்டத்துக்கு பௌத்த துறவி உண்ணாவிரதம் இருந்ததும், ரத்ன தேரரும் ஞானசார தேரரும் கொழும்பிலிருந்து வந்து ஆதரவு தெரிவித்ததும், மேற்படி எண்ணெய் ஊற்றும் செயற்பாடுகளாகும்.
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் கோரிக்கையானது, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விவகாரமாக இருந்திருந்தால், காவிகளின் இந்த ஆதரவு, தமிழர்களுக்குக் கிடைத்திருக்கப் போவதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எது எவ்வாறாயினும் பேரினவாதிகளைக் கிளுகிளுப்பூட்டுவதற்கும், முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும் வேண்டுமாயின் ‘சிங்களம்’ என்கிற இந்தக் கோசம் பயன்படுமே தவிர, ஆட்சியொன்றைக் கைப்பற்றுவதற்கு இந்தக் கோசத்தால் முடியாது என்பதை உறுதிபடக் கூற முடியும்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால், சிங்களக் கோசத்தை எதிர்த்து, மைத்திரி போன்ற ‘இன்ஸ்ரன்ற்’ (உடனடி) வேட்பாளர்களையே வெற்றிபெறச் செய்ய முடியும் என்பதற்கு, கடந்த காலம் உதாரணமாக உள்ளது.

சிங்களக் கோசம் என்பது நாட்டுக்கு ஆபத்தானதாகும். இந்த நாடு சிங்களவர்களுக்கானது என்கிற கோசம்; ஏனைய இன மக்களுக்கான அச்சுறுத்தலாகும். இவ்வாறான கோசம், விஷத்தை விடவும் கொடியதாகும்.

‘எமது வீட்டுக்குள் இப்போது விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டுக்குள் இருக்கும் பாம்பை நாம் வெளியேற்ற வேண்டும். அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும்’ என்று, கண்டியில் நடந்த கூட்டத்தில், ஞானசார தேரர் கூறியதைத்தான், நாமும் கூறவேண்டியுள்ளது.

விஷப் பாம்புகளை விரட்டியே ஆக வேண்டும். ஆனால் எது விஷம்? பாம்பு யார்? என்பதை தெளிவூட்ட வேண்டியது, இனங்களுக்கிடையிலான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்கிற விருப்பம் உள்ளோருக்கான கடமையாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (09 ஜுன் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்