ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

🕔 July 8, 2019

– பாறுக் ஷிஹான் –

முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 

‘அண்மையில் உள்ள அரச பாடசாலை – சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி கட்டடத் திறப்பு விழா இன்று திங்கள்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.பீ. முஜின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே மமேற்கண்டவாறு ஹரீஸ் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“கல்வித்துறையில் முன்னணி நாடாக இருந்துவந்த எமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் நல்ல பெயர் இருந்தது. ஆனால் யுத்த காலத்தின் பின்னர்  நாம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். மாணவர்களை நேரான பாதையில் பயணிக்க பாடசாலைகள் சரியாக வழிநடத்தவேண்டும். அண்மையில் இலங்கையை உலுக்கிப்போட்ட சம்பவத்தினால் ஆயிரக்கணக்கான வருடங்கள் எமக்கிருந்த கௌரவத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அந்த நாசகார செயலினால் எமது மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தைகள் மிக மோசமாக இருக்கிறது.

தேரர்கள் உண்ணாவிரதம் இருப்பதனால் எமது நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகிறது. கண்டியில் ஒரு தேரர் இருந்த உண்ணாவிரதத்தினால் எழுந்த கொதிநிலையால் முஸ்லிங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து, எமது மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பினை ஏற்று நாங்கள் கூட்டாக ராஜினாமா செய்யவேண்டும் எனும் எனது சிந்தனையை எல்லோரும் ஏற்று கூட்டாக ராஜினாமா செய்தோம்.

இல்லாது விட்டிருந்தால் இந்த நாட்டின் பொருளாதாரமும், இறைமையும் சொல்லொண்ணா படுபாதாளத்தை தொட்டிருக்கும். 

மகாநாயக்க தேரர்கள் எம்மை பதவிகளை மீண்டும் பெறுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து நிலைமைகளை விளக்கி கூறினோம், அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவையும் இன்னும் பல அரசியல் பிரமுகர்கள், அரபு நாடுகளின் தூதுவர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து எமது பிரச்சினைகளை விளக்கிக் கூறினோம்.

இந்த நாட்டு முஸ்லிங்களை வாடகைக்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்களை போல எண்ணிக்கொண்டிருக்கும் சில சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் வழிவிட முடியாது. 

நேற்றைய தினம் கண்டியில் ஒரு குழுவினர் கூட்டம் ஒன்றை நடத்தி ஒன்பது தீர்மானங்களை முன் வைத்துள்ளார்கள். அதில் நாங்கள் உயிராக நினைக்கும் ஹலால், ஹராம், விவாக, விவாகரத்து சட்டம் என்பவற்றை இலக்காக கொண்டு தீர்மானங்களை முன்வைத்துள்ளார்கள். 1956ஆம் ஆண்டு எங்களுக்கு இலங்கை அரசியலமைப்பு உருவாக்கித் தந்த – அந்த சலுகைகளை இல்லாதொழித்து ஒரே நாடு, ஒரே சட்டம் என பல கதைகளை கதைக்கிறார்கள். 

ஐ.தே.க வில் சம்பிக்க, நவீன் திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, தாமரை மொட்டு கட்சியில் உதய கம்மன்வில, விமல் வீரவன்ச, சுதந்திர கட்சியில்  தயாசிறி போன்றோர்களும் இன்னும் பலரும் இந்த கொள்கையை கொண்டவர்கள்.

ஒரே நாட்டில் ஒரே சட்டம் என்பவர்கள் நாட்டின் கடந்த கால நிலைமைகளை அறியாமல் இருக்கிறார்கள். இந்த நாட்டில் அப்படி ஒன்று இருக்கவில்லை. தேசபற்று மிக்க இலங்கை முஸ்லிங்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்க மாட்டார்கள். ஆனால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினாலும் பாதுகாப்பு இல்லை என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான, தேர்தல் வெற்றிக்கான முன்னெடுப்புக்களே.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை எதிர்த்து ஐ.தே.க சார்ந்த அமைச்சர் ஆசு மாரசிங்க அமைச்சரவை பத்திரம் கையளித்தது , மொட்டு உறுப்பினர்கள் சிலர் முழுமையாக இனவாதம் பேசுவதெல்லாம் 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிக்கொள்கை மூலம் பண்டாராநாயக்காவுக்கு வந்த வாக்கு அலைபோல, தேசிய கட்சிகள் தமது அரசியல் விஞ்ஞபனத்தை வலுப்படுத்தி, தெற்கில் தமது அரசியலை முன்னெடுக்க செய்யும் அழுத்தங்களே இவையாகும். 

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்களை வைத்து முஸ்லிங்களின் சகல வர்த்தக நிலையங்களும் பொருளாதாரத்தில் பாரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. சில வசதி படைத்தவர்கள் மனஉளைச்சல் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியறும் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர். இது எமது நாடு என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

பிரதமர் ரணில் மற்றும் சாகல ரத்நாயக்க சட்டம் ஒழுங்கு அமைச்சர்களாக இருந்த போது ஜிந்தோட்ட, அக்குறணை, அம்பாறை தாக்குதல்கள் நடந்தன. அப்போது இவர்களும், ஐ.தே.க. தலைமைகளும் எங்களுக்கு செய்தது என்ன? விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்களின் அரசியலில் பாரிய நெருக்கடி இருக்கிறது. யாழில் பேசிய சம்பந்தன் ஐயா, ஆயுத போராட்டத்தின்போது இருந்த மதிப்பு இப்போது இல்லை. இந்த அரசாங்கங்கள் நமக்கான தீர்வுத்திட்டத்தை தராமல் ஏமாற்றுவதாக மனம் நொந்து பேசுகிறார். இந்த நாட்டில் தமிழர்களோ அல்லது முஸ்லிங்களோ தனித்துநின்று எதனையும் சாதிக்கமுடியாது. எமது தமிழ்-முஸ்லிம் தலைமைகள் மனம் திறந்து பேச வேண்டும். நாங்கள் முட்டிக்கொண்டிருந்து எதனையும் சாதிக்க முடியாது. 

கடந்த 2005, 2010ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ வெல்வார் என தெரிந்தும் நாம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக அவர்களோடு இணைந்து ரணிலையும், பொன்சேகாவையும் ஆதரித்தோம். 2015இல் மஹிந்தவின் பக்கம் முஸ்லிம் மக்கள் நின்றிருந்தால் நிச்சயம் மஹிந்த வென்றிருப்பார். ஆனால் நாங்கள் அப்போதும் தமிழ் மக்களுக்காக சிந்தித்து இப்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக நின்றோம். 

இந் நிகழ்வில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல், பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.ஏ றகீம், பீ. ஜிஹானா ஆரீப், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எப். நஸ்மியா சனூஸ், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எம்.ஐ.எம். முஸ்தாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்