காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

🕔 July 6, 2019

– மப்றூக் –

காத்தான்குடியில் திருடப்பட்ட மாடுகளை, அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29ஆம் திகதியன்று, எஸ். முகம்மட் சியாம் என்பவர், மாடுகள் களவாடப்பட்டமை தொடர்பில் செய்த முறைப்பாட்டுக்கிணங்க, மேற்படி சந்தேக நபர்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைதாகினர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஸ்தூரி ஆராய்ச்சியின் வழி காட்டலுக்கிணங்க, பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் மொஹம்மட் மற்றும் சார்ஜன் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர், மேற்படி முறைப்பாடு தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பிரதேசத்திலிருந்து களவாடப்பட்ட மாடுகள், அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுக்கப்பட்டதாகக் கிடைக்கப் பெற்ற தனிப்பட்ட துப்பின் பிரகாரம், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அறுக்கப்பட்ட மாடுகளின் தோல்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் காத்தான்குடியைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், ஏனைய மூவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் எனவும், காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட EP – LG 6315 மற்றும் EP – BAA 4272 இலக்கங்களைக் கொண்ட பட்டா ரக லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியதோடு, அவற்றினையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ளமையினால், இது தொடர்பில் மேற்படி பொலிஸ் குழுவினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்