தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

🕔 July 3, 2019

– அஹமட் –

‘தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் ‘புதிது’ வெளியிட்ட செய்தி தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார்.

‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவன், சண்டித்தனமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதோடு, இஸ்லாமிய பீட மாணவர்கள் எவரும், குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை போல், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

எவ்வாறாயினும், நேற்று இரவு கைகலப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய பீட மாணவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையை உறுதி செய்து கொண்ட பின்னரே, குறித்த செய்தியை ‘புதிது’ வெளியிட்டிருந்தது.

‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொடர்பு கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்சொன்ன மாணவர்; புதிது வெளியிட்டுள்ள செய்தியை நீக்குமாறு வற்புறுத்தியதோடு, அந்தச் செய்தி பிழையானது என்றும் வாதிட்டார்.

மேலும், இந்தச் செய்திக்காக ‘புதிது’ செய்தித்தளம் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுத்தார்.

குறித்த மாணவர் ‘புதிது’ ஆசிரியருடன் பேசியமை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையேற்படும் போது, அது வெளியிடப்படும்.

இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், ‘புதிது’ செய்தித்தளத்தில் நாளை வெளியிடப்படும்.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்