தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்

🕔 July 3, 2019

– முகம்மத் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் மாணவ குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று, அதற்கான முடிவுகளும் வெளியானது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்பு, நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் ஒன்பது மணியளவில், குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, சிங்கள மாணவர்களை அதிகமாக கொண்ட ஏனய பீடங்களுக்கான மாணவர் யூனியன் நிருவாகங்கள் தேர்தலின்றி மனச்சாட்சியுடன் தெரிவு செய்யப்பட்டன.

ஆனால் நூறுவீதம் இஸ்லாமியர்களைக் கொண்டதும், மக்களுக்கு நல்லுபதேசம் செய்கின்ற மௌலவிமார்களை கொண்டதுமான இஸ்லாமிய, அரபு மொழி பீடத்தில் மட்டும் தேர்தலின்றி யூனியனை தெரிவு செய்யும் மனச்சாட்சி இருக்கவில்லை.

எந்தவித பிரயோசனமும் இல்லாத அற்ப பதவிகளுக்காக எமது இஸ்லாமிய மாணவர்கள் வரிந்துகட்டிக் கொண்டும், அவர்களுக்கிடையில் தகாத வார்த்தைகளினால் வசைபாடிக் கொண்டும் வாக்கெடுப்பு வரைக்கும் சென்றதோடு, இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டதானது மிகவும் வெக்கக்கேடான செயலாகும்.  

Comments