ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு

🕔 June 25, 2019

– அஹமட் –

ம்பாறை மாவட்டம் – பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்த பொதுமக்களை, நேற்று திங்கட்கிழமை ராணுவ உடை தரித்த சிலர் கடுமையாகி தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், இன்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொதுமக்கள் தாக்கப்படும் காட்சிகள், அங்கு காணப்பட்ட சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் அன்சில் கூறியுள்ளார்.

இதேவேளை, ராணுவ உடையில் வந்து – தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கமும் சிசிரிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகவும் அன்சில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிலேச்சத்தனமானதும், சட்டத்துக்கு முரணானதுமான தாக்குதல் தொடர்பில், பாதிக்கப்பட்ட யாரும் முறைப்பாடு செய்திராத நிலையிலேயே, சமூக அக்கறை நிமித்தம் அன்சில் முறைப்பாடு செய்துள்ளார்.

“இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக, நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால், இதைவிட பாரதூரமான தாக்குதல்கள் நம்மீது எதிர்காலத்தில் நடத்தப்படலாம்” என்று, இந்த சம்பவம் குறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் அன்சில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனவே, இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்கள் – தமக்கு இழைக்கப்பட்ட அக்கிரமத்துக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், அவ்வாறானவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளின் போது, தான் உதவி வழங்கக் காத்திருப்பதாகவும் அன்சில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்