முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

🕔 June 10, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

ரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற மாவட்ட  அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே, இதனைத் தெரிவித்தார்.

“இங்கு வருகை தந்திருக்கும் திணைக்களத் தலைவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். முஸ்லிம் பெண்கள் தங்களது அலுவலகங்களுக்கு ஹபாயா போன்ற உடையினை அணிந்து வருவது அவர்களது உரிமை. இதனை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கான மேலதிக நடவடிக்கைகளை உரிய அமைச்சுடன் இணைந்து ஆராய்ந்து வருகிறோம்.

இதற்கான சுற்று நிரூபம் விரைவில் வெளியிடப்படும். எனவே இது விடயத்தில் திணைக்களத் தலைவர்களாகிய நீங்கள், முஸ்லிம் பெண்கள் விடயத்திலும் அவர்களின் ஹபாயா ஆடை விவகாரத்திலும் தலையிட வேண்டாம்.

திருகோணமலை மாவட்டம் மூவின சமூகத்தையும் ஒன்றிணைத்து, நல்லிணக்கம் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தும் ஏனைய மாவட்டங்களை விட முன்னிலையில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களை விடவும் இனவாத மதவாத பிரச்சினைகளோ இங்கு கிடையாது. பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் வெளியில் இருந்து வருகின்ற கூட்டமே தவிர, இங்குள்ளவர்கள் அல்ல. இங்கு சுமூகமான சமாதான நிலைமை தொடருகின்றது. நாட்டை சீர்குலைத்து அழிவுப் பாதைக்குள் தள்ளிவிடுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.

1983 ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போன்று ஒரு பிரச்சினையை இனமுறுகலை உருவாக்கா சிலர் முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை வலுவிலக்கச் செய்கிறது. இந்த அரசாங்கத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை துறப்பதற்கு பிரதான காரணம், நாட்டில் அமைதியான நிலை ஏற்பட வேண்டுமென்பதே. அதுவே எமது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் .

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுப்பதனால் அவர் மீது பழி தீர்க்க, தீய சக்திகள் முனைந்து வருகிறார்கள். நாட்டை அழிவில் இருந்து மீட்டெடுத்து பொருளாதாரத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வோம். இதற்காக சகலரும் இனமத பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments