முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

🕔 June 8, 2019

“ஜ.எஸ் அமைப்பினரை இலங்கையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் புலிகளை தமிழர்கள் காட்டிக் கொடுக்கவில்லை” என்று சிலர் கூறுவது முட்டாளத்தனமான கருத்தாகும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் எனக் காட்டுவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறு பேசுவதாகவும், இப்படி பேச வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரகுமான் மற்றும் பிமல் ரட்நாயக்க ஆகியோரிடம் சமீபத்தில் தொலைக்காட்சி அரசியல் நிகழ்வின் போது, தான் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கூறுவது தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விடும் முட்டாள் கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதோ இந்நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் மட்டுமே தவறு செய்து விட்டார்கள் என்றும், பெரும்பான்மை சிங்களவர்கள் தவறே செய்யவில்லை என்ற எண்ணத்தை இந்தக் கருத்து ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் போராட்டத்தின் போது, தமிழர் ஒட்டுக்குழுக்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லையா? பயங்கரவாதிகளை நாங்கள் காட்டிக்கொடுத்தோம் என்று கூறித்தான் முஸ்லிம்கள், பேரினவாதிகளிடமிருந்து தப்ப வேண்டுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புலிகள் ராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கொண்டு வந்த 13ம் திருத்தம் கூட இன்னமும் இங்கே முழுமையாக அமுலாகவில்லை.

ஜ.எஸ் என்பது வெளிநாட்டு இயக்கம். அது இலங்கையில் குண்டை வெடிக்க வைத்து, இலங்கை மக்களைக் கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது. ஐ.எஸ் வன்முறையானது ஒரு போராட்டம் மாதிரி தெரியவில்லை.

ஒரே நாளில் ஏழு குண்டுகளை வெடித்து விட்டு, வெளிநாட்டில் இருந்து ஒருவர் விளங்காத பாஷையில் உரிமை கோருகிறார். இதற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்றும் அமைச்சர் கேட்டுள்ளார்.

ஐ.எஸ் வன்முறையானது இலங்கையில் ஒரு போராட்டம் கிடையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐ.எஸ் வன்முறையின் பின்னணிக் காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.

புலிகளின் வன்முறை தொடர்பாக அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் கூட, புலிகளின் போராட்டக் காரணிகள் பகிரங்கமானவை. அவை நியாயமானவை. புலிகளின் போராட்டமே இலங்கையில் மாகாண சபையையாவது தருவதற்கு இலங்கை அரசை நிர்பந்தித்த பிரதான காரணமாக அமைந்தது என்பதை குறைந்தபட்சம் மாகாணசபை உறுப்பினர்களாவது மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, ஐஎஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒருபோதும் ஒப்பிடவே முடியாது.

“சுவர்க்கத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள்” என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா? இதையும் புலிகளின் போராட்ட காரணங்களையும் ஒப்பிட முடியுமா?

ஆகவே இப்படி ஒப்பிட்டுப் பேசி, “முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள்”எனக்கூறி, பேரினவாதிகளின் மனங்களை குளிரவைத்து, நியாயப்படுத்தி காலத்தை வீணடிக்காமல், பேரினவாதத்தை துடைத்தெறிய முன்வந்து போராட வேண்டும் எனவும் அவர் தனது ‘பேஸ்புக்’ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்