காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

🕔 June 5, 2019

யங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா றிசாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். 

அவ்வாறான எந்த விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு நிருபிக்கப்பட்டால் அதற்கான உச்ச தண்டனையாக, அது மரண தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” எனக்கூறிய அவர்  “என்னைக் காட்டி என்  சமூகத்தை பலியாக்காதீர்கள். முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை அழிக்காதீர்கள் உங்களின் அரசியல் தேவைகளுக்கு நாங்கள்  உதவி செய்யாத காரணத்தினால் கொடுமைகளை செய்யாதீர்கள். என்றார்  பதவி , பட்டம், ஆட்சி, அந்தஸ்து, எல்லாம் இறைவனால்  தரப்படுபவை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்.

கருவறுக்கிறீர்கள்

ஏகாதிபத்திய சதிகாரர்களினால் உருவாக்கப்பட்ட ஐ.எஸ்.  இயக்கத்துடன் இலங்கையில் வாழும் 22 இலட்சம்  அப்பாவி முஸ்லிம்களை தொடர்புபடுத்தி அவர்களை அணுவணுவாக சித்திரவதை செய்வதை கைவிடுங்கள்.ஏதோ ஒரு வகையில் இங்கே ஊடுருவி விட்ட இந்த பயங்கரவாத இயக்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை அவர்களின் மிலேச்சத்தனமான இந்த செயலை நாம் ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் இதனை வெறுக்கின்றது. உலக  முஸ்லீம் நாடுகளின் பரம விரோதியான இந்த கயவர் கூட்டத்துடன் இலங்கை முஸ்லிம்களை கோர்க்காதீர்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் இந்த இயக்கத்தை இல்லாதொழிப்தற்கு முஸ்லிம்களாகிய நாம் அத்தனை உதவிகளையும் வழங்கினோம். சாய்ந்தமருதில் ஒளிந்திருந்த இயக்கத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்து, அவர்களாகவே குண்டுகளை வெடிக்க வைத்து அழிவதற்கு வழி வகுத்தோம். எங்கெல்லாம் இவர்கள் ஒளிந்துகொண்டு இருந்தார்களோ அவர்களை காட்டிக்கொடுத்தோம்  கைது செய்வதற்கும் உதவினோம்.

தற்கொலைதாரி ஒருவரின் மனைவி குண்டு தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் இதனை கேள்வியுற்று அவரது கணவரின்  ஆவணங்களையும் ஒளிப்பதிவு சாதனங்களையும் பொலிஸில் ஒப்படைத்து விசாரணைக்கு உதவினார். 

நாங்கள் தலைமைத்துவத்திற்கு  கட்டுப்பட்ட ஒரு சமூகம். ஜம்மியத்துல் உலமாவின் கீழ் எமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒருமித்து பயங்கரவாத நடவடிக்கையை எதிர்த்தோம் . கண்டித்தோம். எனினும் எமது சமூகத்தை எப்படியாவது கருவறுக்க வேண்டுமென நீண்ட காலமாக துடித்து திரியும் இனவாதக்கூட்டம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மை இலக்கு வைத்து, துரத்தி துரத்தி தாக்குகின்றது. எமது உள்ளத்தை உடைக்கின்றது. நெஞ்சை பிளக்கின்றது விஷத்தை கொப்பளிக்கின்றது. 

இனவாதிகளின கயமை

குண்டுக்தாக்குதல் நடந்து சரியாக 21 நாட்களின் பின்னர் இவர்களின் கயமைத்தனம்   சிலாபத்திலிருந்து தொடங்குகின்றது முகநூல் பதிவை  விளங்கிக்கொள்ள முடியாத இந்த அறிவிலிகள் தமது காடைத்தனத்தை கட்டவிழ்த்து. விடுகின்றனர் வடமேல் மாகாணத்தில் அத்தனை முஸ்லிம் கிராமங்களும் துவம்சம் செய்யப்படுகின்றது. தும்மல சூரிய, நாத்தாண்டிய, நிக்கவரட்டிய, கொட்டரமுல்லை, மினுவாங்கொட ஆகியவற்றிலும் இவர்கள் தமது கைவரிசைகளை காட்டினர். பள்ளிகள் வீடுகள், வியாபாரஸ் தலங்கள், எரிக்கப்பட்டும் தகர்க்கப்பட்டும் கிடக்கின்றன.

கொட்டரமுல்லயில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். எனினும் சட்டம் இவர்களுக்கு எதிராக இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனையானது.

52 நாட்கள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு நான் உதவவில்லை என்பதற்காக பழி தீர்க்கப் பார்க்கின்றனர்.

எங்களை பதவி நீக்க வேண்டும் என்று தேரர் ஒருவர் கண்டியில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது, இனவாத பௌத்த மத குரு மாரும் கடும்போக்கர்களும் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை பழி தீர்க்க முயற்சித்தனர். தலதா மாளிகைக்கு முன்னால் சென்ற 3 முஸ்லிம் இளைஞர்களை இந்த காடையர்கள் அடித்து துன்புறுத்தினர். கடைகளை மூட வைத்து நாட்டிலே ஒரு வன்முறை சூழல் ஒன்றை உருவாக்க முஸ்தீபு செய்தனர்.

எனவே தான் சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் நாட்டின் அமைதி கருதியும் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், கபீர் காசிம், ஹலீம்,  மற்றும் நான் உட்பட இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர், மற்றும்  ஆளுநர்கள் எமது  பதவிகளை தூக்கி எறிந்தோம்  நாங்கள் யாருக்கும் பயந்து ராஜினாமா  செய்வில்லை.  இந்த நாட்டில் மீண்டும் இனக்கலவரமோ யுத்தமோ இடம்பெறக்கூடாது என்ற சமூக கடப்பாடும் பொறுப்பும் எமக்கு இருக்கிறது.

இனவாதிகளை பாதுகாக்கிறீர்கள்

ஆனால் தேசப்பற்றாளர்கள் என கூவித்திரியும் கடும்போக்கர்கள் முஸ்லிம் கடைகளுக்கு போக வேண்டாம் எனவும் பகிஷ்கரிக்குமாறும் காட்டுச்சட்டம் போடுகின்றனர். அப்படியானால்  முஸ்லிம் நாடுகளை பகைத்து கொண்டு இவர்களால்  வாழ முடியுமா? அங்கிருந்து தானே பெற்றோல் வருகின்றது. சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார்கள். சில மத குருமார்களின் பேச்சுக்கள் கடும் போக்குவாதத்தை அப்பட்டமாக பிரதி பலிக்கிறது.

ஒரு கூட்டம் தொடர்ந்தும் சதி செய்கின்றது. அவர்களை பாதுகாக்கின்றீர்கள். ஆனால் பயங்கரவாதத்தை வெறுக்கும் எங்களுக்கு தொடர்ந்தும் தொல்லை தருகின்றீர்கள்.

இந்த நாட்டிலே இன வாதிகளுக்கும் கடும்போக்கு வாதிகளுக்கும் ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு இன்னொரு சட்டமுமா பிரயோகிக்கப்படுகின்றது? அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த அட்டூழியக்காரர்களை அடக்காமல், கைகட்டி, வாய் பொத்தி பொலிசாரும் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதியோ, பாதுகாப்பு பிரதி அமைச்சரோ எந்த நடவடிக்கையும்  எடுக்கத் துணிகின்றார்கள் இல்லை. 

ஆனால் சிறு சிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். கப்பல் சுக்கான் பொறிக்கப்பட்ட  ஆடை அணிந்த பெண் ஒருவர் சக்கரம் அணிந்தார்  என  கைது செய்யப்பட்டு 21 நாட்களின் பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.  திவயின பத்திரிகை வைத்திருந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்கள் என்ற சாட்சியங்களுடன்  கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானால்  இந்த நாட்டில் சட்டம் சமனாக பேணப்படவில்லையா என இந்த உயர் சபையில் கேட்கின்றேன்” என்றார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்