ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு

🕔 June 1, 2019

ராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது.

எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 முதல் 13,000 வரை இருக்கும் என்று ‘ஏர் வார்ஸ்’ எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியது முதல் இதுவரை 34,502 வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் அமைப்பு ஆக்கிரமித்த பின்னர், அந்தப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கியது.

எட்டு மாதங்களுக்கு முன்னர் தங்கள் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 1,100 என்று அமெரிக்க கூட்டுப்படை தெரிவித்திருந்தது.

தங்கள் தாக்குதல்களால்தான் இறந்தார்களா என்று மேலும் 111 மரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் அந்தக் கூட்டுப் படையினர் தற்போது தெரிவித்துள்ளார்கள்.

உண்மை நிலவரத்தை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஆழமாக மறுத்து வருவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் மூத்த அவசர கால ஆலோசகர் டொனடெல்லா ரோவேரா கூறுகிறார்.

சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக 2017இல் ஐந்து மாதங்கள் நடந்த தாக்குதல்களில் மட்டும் 1,600க்கும் மேலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கடந்த மாதம் செயற்பாட்டாளர்கள் நடத்திய கள ஆய்வு கூறுகிறது.

ரக்கா நகரம் ஐ.எஸ் அமைப்புக்கு செயல்முறையில் தலைநகராக விளங்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்