தாக்குதல் நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 May 28, 2019

ஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம்,  அவசரகால சட்டத்தின்  33 (ஈ) பிரிவின் கீழ்  அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக,  சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  அஜித் குமார நீதிமன்றுக்கு  இன்று அறிவித்தார்.

இந்த நிலையில், அது தொடர்பிலான சாட்சி சுருக்கத்தினை மன்றில் சமர்ப்பிப்பதற்காக  நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் குருணாகல், நிக்கவரட்டிய, குளியாபிட்டிய  மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களுக்குட்பட்ட  பகுதிகளில்  வன்முறைகள்  கடந்த 13 ஆம் திகதி பதிவான நிலையில், அந்த திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அமித் வீரசிங்க குளியாபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹெட்டிபொலை பகுதியிலும், நிக்கவரட்டி பொலிஸ் பிரிவின் ரஸ்நாயக்கபுர பகுதிகளிலும் சுற்றித்திரிந்துள்ளமை அவரது தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது என பொலிஸார் இன்று நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அத்துடன் அமித் வீரசிங்கவின் மஹசோன் பலகாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும்  ஹெட்டிபொலை பகுதியைச் சேர்ந்த கலமுதுவே சுசீம தேரர் எனும் பிக்குவை தற்போது தேடி வருவதாகவும், வன்முறைகளின் பின்னர் அவரும் பிரதேசத்தை விட்டு தலைமறைவகையுள்ளதாகவும் இதன்போது  பொலிஸார் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

Comments