றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை; முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சி: சட்டத்தரணி அன்சில்

🕔 May 20, 2019

– பி. முஹாஜிரீன் –

“முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை இன்று காண்கின்றோம். யாரெல்லாம் இந்த முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களின் குரல்வளையை நசுக்கி விடுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது” என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

தற்போதைய நாட்டு நிலைமைகள் தொடர்பாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று திங்கட்கிழமை ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, சட்டத்தரணி அன்சில், மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான ஹிஸ்புள்ளாஹ் மற்றும் ஆஸாத் சாலி போன்றவர்களை இலக்கு வைத்து ஊடகங்கள் மூலம் இனவாதிகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்துகின்றனர்.

அதில் பிரதானமானதுதான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையாகும். அதை அமைச்சருக்கெதிரான பிரேரணை என்பதை விடவும், முழு முஸ்லிம் சமூகத்தினதும் உரிமைக் குரலை ஒடுக்குகின்ற ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டும். 

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தனது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஒருவரின் பேசுகின்ற உரிமையைத் தடுக்கின்ற செயற்பாடாகவே இதனைப் பார்க்கலாம்.

வெளி நாடுகளிலே, ராணுவத்தின் அநியாயமான செயற்பாடுகளை, மக்களுக்கெதிராகச் செய்கின்ற அட்டூழியங்களை பல அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலே ஊடகவியலாளர்கள் வெளிக் கொண்டு வருவார்கள். இது ஊடகத்தின் தார்மீகப் பணியாகும். ஆனால், சில ஊடகங்கள் செய்யும் அநியாயத்தை, நிறுத்துங்கள் என்று ராணுவத் தளபதி சொல்லுகின்ற விநோதம் இலங்கையில் மாத்திரம்தான் நடைபெற்றிருக்கிறது.

கத்திகளை விற்பதற்கோ, காட்சிப்படுத்துவதற்கோ இலங்கையில் தடையில்லை. ஆனால், அவற்றினை முஸ்லிம்கள் மாத்திரம் வீடுகளில் வைத்திருந்தால் அதனை பெரும் யுத்த ஆயுதங்கள் வைத்திருப்பது போன்று, பெருங் குற்றமாக இனவாத ஊடகங்கள் சித்தரித்துக் காட்டுகின்றன. இதன்போது அந்த ஊடகங்களைப் பார்த்து ராணுவத் தளபதி; ‘உங்களது நாடகங்களை நிறுத்துங்கள்’ என்று கூறும் நிலை இலங்கையிலேதான் நடைபெற்றிருக்கிறது.

இவ்வாறு இந்த நாட்டிலே சில ஊடகங்கள் செய்கின்ற அநியாயத்தை ராணுவத் தளபதி நிறுத்துமளவுக்கு ஊடக தர்மம் செயற்படுகின்றது என்ற நிலையிலே, ராணுவத் தளபதிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள், தமது மக்களை பொறுமையோடு வழிப்படுத்தியமைக்காகவும் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை நம்பிக்கையோடு பார்த்மைக்காகவும் இந்த நாட்டு முஸ்லிம்கள் நன்றி கூறுகிறார்கள்.

நாம் எல்லோரும் அடிமைகளாகி விடுவோமோ என்று பயப்படுகின்ற அளவுக்கு எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களே பயந்திலிருந்தபோது, சில முஸ்லிம் தலைவர்கள் இது பௌத்த நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையிலே, இந்த நாடு பௌத்த நாடல்ல, இது எல்லோருக்குமான நாடு என்று கூறிய அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நாங்கள் நன்றி கூற வேண்டும். எமது முஸ்லிம் தலைவைர்கள் இவ்வாறு சொல்லாமல் மௌனமாகவிருப்பது கவலையான விடயம். 

நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எமது சமூகம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையை இழந்தவர்களாக எமது சமூகம் இருக்க முடியாது. யாரோ ஒரு சிலர் செய்த மடமைத் தனத்துக்காக ஒட்டு மொத்த சமூகமும் தலைகுனிந்து அடிமைகளாகிச் செல்ல வேண்டிய தேவையில்லை.

இங்கிருக்கின்ற எல்லோருமே எங்களை அடிமைகளாக்கவே முயற்சிக்கிறார்கள். மொடரேட் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இனவாதிகளுக்கு மத்தியிலே நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்கின்ற தலைவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

எமது சமூகத்துக்கு இக்கட்டான நிலை வருகின்றபோது, ஒரு தந்தைதையின் ஸ்தானத்தில் இருந்து, தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் மத்தியில் ராணுவத் தளபதியோடு பேசும் நமது சமூகத்தின் அரசியல் தலைமையை பாதுகாக்க வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது.

நாங்கள் மொடரேட் முஸ்லிம்களாக எங்களைக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நாங்கள் முஸ்லிம்கள், எங்களுக்கென்று குர்ஆனும், ஹதீதும் இருக்கிறது. அவற்றை நாம் பின்பற்றுவதற்கு யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

நடந்த இந்த நிகழ்வுகளுக்காக எமது அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்லத் தேவையில்லை. பல பக்கங்களிலும் எமது சமூகத்தை அடிமைப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். 

ரிஷாட் பதியுதீனுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால், ஹிஸ்புள்ளாவுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டால் அவர்களுக்கு உறுதுணையாக இந்த சமூகம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்கே இவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்புக்களைச் நடத்துகிறோம்.

இந்த சமூத்துக்கு ஆதரவாக யாரெல்லாம் தமது குரலை உயர்த்திப் பேசினார்களோ, அவர்களுக்கெதிரான சதிகளை தோற்கடிப்பதற்கு முன்னின்று தோள்கொடுக்கின்றவாகளாக நாங்கள் மாற வேண்டும். இந்த நிலைமை ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் வெளிப்படத் தொடங்கும். யாரோ ஒரு கூட்டம் செய்த தவறுக்காக, ஒட்டு மொத்த சமூகத்தையே அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்க கூடாது. முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த தவறுக்காக, பாதிக்கப்பட்ட மக்களின் கவலைகளிலே நாம் பங்கு கொண்டோம். 

ஆனால், இந்த நிகழ்வுகளின் பிறகு, இனவாதிகளின் வக்கிர புத்திகளிலிருந்த அத்தனை எண்ணங்களையும் கொண்டு வந்து, எமது சமூகத்திலே திணித்து, எங்களுக்கெதிராக சட்டங்களைத் திருத்தியோ அல்லது வேறு விதமாகவோ செயற்பட முனையும் போது, எல்லா உரிமைகளையும் இழந்து வாழ்கின்ற சமூகமாக நாம் இருக்க முடியாது. 

புதிதாக எங்களுக்கு எந்த உரிமையும் சட்டமும் தேவையில்லை. இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்வோம் என்கின்ற இடத்திற்கு, இன்று எமது சமூகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

இந்த நாட்டிலே முஸ்லிம்களும் பிரஜைகள்தான். இது பல்லின சமூகம் வாழுகின்ற நாடு. இது இலங்கையருக்கான நாடு. நாங்கள் பிறந்து வளர்ந்த நாடு. முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றால் இங்குள்ள பௌத்தர், இந்துகள் என்று எல்லா இனத்தவர்களும் வந்தேறு குடிகள்தான். வந்த காலத்தில்தான் வேறுபாடுகள் உள்ளன.

ஆனால், பெரும்பான்மை சிறுபான்மை என்று இருக்கலாம். ஏல்லோரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்களே. இந்த நாட்டிலே சம உரிமையோடு எல்லோரும் வாழக்கூடிய உரிமை இருக்கிறது.

அனைத்தையும் விட்டுக் கொடுக்கும் மன நிலைமைகளிலிருந்து நாம் மாற வேண்டும். எங்களுடைய மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கின்றவர்களாக தலைவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு தலைவராக இருக்கின்ற ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே இனவாதம் வெல்லுமா தோற்குமா என்பதற்கப்பால், ரிஷாட் எனும் குரல் ஓங்கி ஒலிப்பதற்கான வேலைத் திட்டத்தை சமூகத்திலே முன்னெடுக்க வேண்டும். 

அவருக்கெதிரக முன்வைக்கப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் மிகப் பொய்யானவை என்பதை அவருக்கு அருகிலிருக்கின்றவர்கள் என்ற வகையில் நாங்கள் அறிவோம். இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகப் பின்பற்றி பேணுதலாக வாழ்கின்ற அமைச்சர் ரிஷாட், பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனத்திற்கு எந்த வகையிலும் துணை போகக் கூடியவரல்ல என்று, மிக நம்பிக்கையோடு கூறுகின்றோம்.

இதேபோன்றுதான், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, ஆஸாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கெதிரான குற்றச் செயற்படுகளும் பொய்யானவை. காழ்ப்புணர்ச்சி மிக்கவை. 

எனவே, இவ்வாறான தலைவர்களுக்கெதிரான செயற்பாடுகளை முறியடிக்க முஸ்லிம் சமூகம் பக்கபலமாக செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற தலைமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. தாஹீர், அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம். சிறாஜ், ஆர்.றிஸ்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்