அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்

🕔 May 16, 2019

ப்ரல் 21ஆம் திகதியன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முஆத் என்பவரின் மனைவிக்கு, இம்மாதம் 05ஆம் திகதி முதலாவது குழந்தை கிடைத்துள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமட் முஆத் எனும் 22 வயதுடைய மேற்படி நபர் ஒரு சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடடத்தக்கது.

கடந்த செவ்வாய்கிழமை முஆத்தின் 59 வயதான தந்தையார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

அலாவுதீனின் ஐந்து பிள்ளைகளில் முஆத் 04ஆவது பிள்ளையாவார்.

14 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட முஆத்தின் மனைவிக்கு, கடந்த 05ஆம் திகதி குழந்தை கிடைத்ததாக, முஆத்தின் தந்தை கூறினார்.

முஆத்தின் மூத்த சகோதரிக்கு குழந்தை கிடைத்ததை அடுத்து அவரின் வீட்டு ஏப்ரல் 14ஆம் திகதி முஆத் வந்ததாகவும், அங்குதான் அவரை – தான் கடைசியாகக் கண்டதாகவும் முஆத்தின் தந்தை அலாவுதீன் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

தாக்குதல் நடந்த அன்று முஆத்தின் மூத்த சகோதரனை தொலைபேசி மூலம் அழைத்த முஆத்தின் மனைவி, பெற்றோரின் வீட்டுக்கு முஆத் வந்தாரா என்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலின் பின்னர் முஆத்தின் எஞ்சிய உடல் பாகங்களை வைத்து அடையாளம் கண்ட அவரின் தந்தை; முஆத்துக்கு தொழில் இல்லை என்றும், அதனால் அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாவை தாங்கள் வழங்கி வந்ததாகவும் கூறினார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே, முஆத்தை தாங்கள் திருமணம் செய்து வைத்தாக நீதிமன்றில் அவரின் தாயார் கூறினார்.

“என்னைத் தேட வேண்டாம், இனி நான் திரும்பி வரப் போவதில்லை. தயவு செய்து பெற்றோரைப் பார்த்துக் கொள்ளுங்கள், எனக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று, தனது சகோதரி ஒருவரின் கணவருக்கு, முஆத் கடிதம் ஒன்றை எழுதி விட்டுச் சென்றிருந்ததாக, முஆத்தின் மைத்துனர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அவரின் மரணத்தின் பின்னரே, அந்தக் கடிதம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்