பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம்

🕔 May 13, 2019

பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது சுடுகலங்களை பாவிப்பதற்கு வலியுறுத்திள்ளோம். அத்துடன் சட்டத்தை கையிலெடுக்கின்ற இந்த நாசகாரக் கும்பல்களுக்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும் இன்றைய பாதுகாப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஒப்பரேசன் அறையில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றன. 

இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்;

குருநாகல் மாவட்டத்தில் இன்றைய நாள் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிப்பொல, அனுக்கன, கொட்டம்பிட்டிய, குளியாப்பிட்டிய, மடிகே, நிக்கவரெட்டிய, நாத்தாண்டியா உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ராணுவம் மற்றும் முப்படை வீரர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் அவசரகால சட்டத்தின் பிரகாரம் கலகக்காரர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன. அத்துடன் அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ட இடங்களில் சுடுகலங்களை பாவிப்பதற்கு உத்தரவு வழங்குமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். 

இதன்பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஒப்பரேசன் அறையில் உயர்மட்ட பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு பதில் அமைச்சர் ருவன் விஜயவர்தன, அமைச்சர்களான நளின் பண்டார, அகிலவிராஜ் காரியவசம், மலிக் சமரவிக்கிரம, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் கூட்டுத் தலைமை பொறுப்பதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பல இடங்களிலிருந்து கிடைக்பெறும் தகவல்களை திரட்டி, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த அசம்பாவிதங்கள் வேறு பகுதிகளுக்கும் பரவுவதற்கான சாத்தியங்கள் தென்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறினோம்.

ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினோம். சட்டத்தை கையிலெடுக்கின்ற நாசகாரக் கும்பல்களை அடையாளம் காண்பதுடன், அதற்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினோம். 

சில இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் வன்முறைகள் நடைபெற்றமைக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தேன். அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
கலகக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு சில இடங்களில் போதியளவு படைவீரர்கள் இல்லாமையினால் சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது. அவ்வப்போது நிலைமைகளை கவனத்திற்கொண்டு, இவ்வாறான பிரதேசங்களுக்கு மேலதிக படை வீரர்களை அனுப்பவதற்கு இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதம் எங்களுக்கு தரப்பட்டது. 
ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடைபெறும்போது, அதனை அறியத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், பாதுகாப்புத் தரப்பினர் பள்ளி நிர்வாகிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்